சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இது மம்தா அரசுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் மக்கள் டெபாசிட் செய்த ரூ.2500 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் விசாரித்து வந்தார்.
அதன்பின், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த மோசடி வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக ராஜீவ்குமாரிடம் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர். அப்போது சில ஆவணங்களை திருத்தியிருப்பதாகவும், வழக்கில் முக்கியமான தடயங்களை ராஜீவ்குமார் அழித்து விட்டிருக்கலாம் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக, விசாரிப்பதற்காக கடந்த ஜனவரி இறுதியில் சிபிஐ அதிகாரிகள் குழு கொல்கத்தாவுக்கு திடீர் விசிட் செய்தது. அந்த குழுவினர், ராஜீவ்குமார் வீட்டை முற்றுகையிட்ட போது, கொல்கத்தா போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அந்த சமயம், முதல்வர் மம்தா பானர்ஜி தெருவுக்கு வந்து சிபிஐக்கு எதிராக போராடினார். வேண்டுமென்றே மத்திய அரசு தனது அரசை சிபிஐ கொண்டு மிரட்டுவதாக கூறினார்.
இதன்பின், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் முன்பாக ராஜீவ்குமார் ஆஜரானார். ஆனால், அவரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தேர்தல் முடிந்த நிலையில், கடந்த 17ம் தேதியன்று அந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. இதைத் தொடர்ந்து, ராஜீவ்குமாரை இன்று கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இன்று ராஜீவ்குமார், சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானால் அவரிடம் நீண்ட விசாரணை நடத்தப்படும் என்றும், அதனடிப்படையில் இன்று(மே27) மாலைக்குள் அவர் கைது செய்யப்படலாம் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.