ரம்ஜானை முன்னிட்டு உ.பி.யில் ஆண்டுதோறும் விமரிசையாக இப்தார் விருந்து கொடுக்கும் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இந்த ஆண்டு நோ சொல்லி விட்டனர். அதே போன்று காங்கிரசும் தவிர்த்துள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகள் கூட தங்களுக்கு கிடைக்காத விரக்தியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
நாட்டிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் உ.பி.தான். இங்கு மூன்றில் ஒரு பங்கு மக்களவைத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதும் அவர்களின் வாக்கு தான் என்பதும் ஒரு காலத்தில் உண்மை.
இதனால் ஆண்டு தோறும் ரம்ஜான் நோன்புக் காலத்தில் இஸ்லாமிய மக்களுக்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் போட்டி போட்டு தடபுடலாக இப்தார் விருந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தன.
ஆனால் இந்தத் தடவையோ, சமாஜ்வாதியும், பகுஜன் கட்சியும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டும் 80 தொகுதிகளில் 15-ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.காங்கிரசோ ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அமேதியில் தோற்றுவிட்டார். ஒரு இஸ்லாமியரைக் கூட களமிறக்காத பாஜகவோ இந்த முறையும் 62 தொகுதிகளை அள்ளியது.
இதனால் தோல்வி தந்த விரக்தி, இஸ்லாமியர்களின் பெரும்பான்மை வாக்கு கிடைக்காத அதிருப்தியால் இந்த ஆண்டு இப்தார் விருந்து கொடுப்பதை மாயாவதியும், அகிலேஷூம் தவிர்த்துவிட்டு, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.காங்கிரஸ் கட்சியும் இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்தவில்லை.
இதே போன்று உ.பி.யில் மாநில அரசின் சார்பில் இப்தார் விருந்து வைக்கும் நிகழ்ச்சியும் காலம் காலமாக நடத்துவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின்பு இப்தார் விருந்து கொடுப்பதை அடியோடு நிறுத்தி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.