காரில் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய மாணவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த அஜய் ராணா(35), கடல்சார் படிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று அதிகாலை 5 மணியளவில் அஜய் ராணா காரில் சென்ற போது, வழியில் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த சிலருக்கு லிப்ட் கொடுத்தார். அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஒருவர். மற்றவர்கள் இறங்கி விட, கடைசியாக அந்த பெண் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் நல்ல விதமாக பேச்சு கொடுத்த அஜய் ராணா, ஆள் அரவமில்லாத பகுதிக்குள் காரை ஓட்டினார்.
திடீரென அதை கவனித்த பெண் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனால், அஜய் ராணா வலுக்கட்டாயமாக அவரை பலாத்காரம் செய்திருக்கிறார். இதன்பின்பு, அந்த பெண் அங்கிருந்து ஓடிச் சென்று தனது நண்பர் மூலம் போலீசில் புகார் செய்தார். இது தெரிந்ததும் அஜய் ராணா தனது நண்பர்களிடம், தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார்.
இதற்கிடையே, லண்டன் போலீசார் சி.சி.டி.வி கேமரா மூலம் காரை அடையாளம் கண்டு ராணாவை தேடிச் சென்றனர். ராணாவின் நண்பர்கள் மூலமாக அவர் இந்தியா திரும்பிய தகவலை அறிந்த போலீசார், இந்தியாவில் இருந்து ராணாவை ஒப்படைக்க கோரினர். இந்நிலையில், ராணா இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டதையும் இங்கிலாந்து போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து, ராணாவுக்கு ஐரோப்பிய வாரண்ட் பிறப்பித்தனர்.
இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் ராணாவை கைது செய்து ஒப்படைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஸ்பெயினில் கடந்த அக்டோபரில் அந்நாட்டு போலீசார், ராணாவை கைது செய்தனர். ஒரு மாதத்திற்கு பின், அவர் இங்கிலாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இங்கிலாந்தில் இப்ஸ்விக் கிரவுன் மாகாண நீதிமன்றம், இந்த பலாத்கார வழக்கை விசாரித்து ராணாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதி்த்து தீர்ப்பு அளித்துள்ளது. ராணாவின் இயர்போனில், அந்த பெண்ணின் டி.என்.ஏ. பதிவாகியிருந்ததால், அதைக் கொண்டு குற்றம் நிரூபணம் ஆனதாக தீர்ப்பி்ல் கூறப்பட்டிருக்கிறது.