காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வியால் துவண்டு விட்டார் ராகுல் காந்தி.தான் ஒருவன் மட்டுமே நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்ற கோபத்தை வெளிப்படையாகவே வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி. இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்து விட்டார்.
ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை கட்சியின் நிர்வாகிகள் உனடியாக நிராகரித்து விட்டாலும், வேறு யாரையாவது தலைவராக தேர்ந்தெடுங்கள், அதுவரைக்கும் வேண்டுமானால் பதவியில் நீடிக்கிறேன் என்று ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்து விட்டார்.
ராகுல் காந்தி ராஜினாமா முடிவெடுத்து ஒரு மாதம் கடந்து விட்டது. பல வழிகளிலும் வலியுறுத்தியும் விடாப்பிடியாக தனது முடிவில் உறுதியாகவே உள்ள ராகுல், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையோ, கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையோ கூட தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி மக்களவையில் காங்கிரசின் பொறுப்புகள் எதையும் ஏற்க மறுத்ததுடன், சபை நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டாமலே உள்ளார். இதனால் வேறு வழியின்றி, நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்.எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்த குரலில் தலைவர் பதவியில் நீடிக்குமாறு ராகுல் காந்தியிடம் வலியுறுத்தினராம். சோனியா காந்தி வலியுறுத்தியும், தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. எனது முடிவில் உறுதியாக உள்ளேன். அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறி விட்டாராம். தோல்விக்கு நீங்கள் மட்டும் பொறுப்பில்லை. ஒட்டு மொத்த காங்கிரசார் அனைவருக்குமே இதில் பங்கு உண்டு. கட்சியை நீங்கள் தான் வழி நடத்த வேண்டும் என சசிதரூர் போன்ற முக்கிய எம்.பி.க்கள் கெஞ்சாத குறையாக வலியுறுத்தியும், ராகுல் காந்தியின் பிடிவாதம் தளராததால் காங்கிரஸ் எம்.பி.க்களைஅதிர்ச்சியடையச் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ராகுல் காந்தி தான் தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் வீடு முன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் தர்ணா நடத்திய இளைஞர் காங்கிரசார் தொடர்ந்து கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.