மக்களவைத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வசமிருந்த மாநிலத் தலைவர் பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்து விட்டது. புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது பூபேஷ்பாகல் மேடையில் மைக் முன் கண்ணீர் சிந்திய காட்சியால் தொண்டர்களும் சோகமாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் திடீரென எழுச்சி பெற்றது. அபார வெற்றி பெற்று 3 முறை ஆட்சியில் இருந்த பாஜகவை துடைத்தெறிந்தது. இந்த வெற்றிக்கு மாநில காங். தலைவர் பொறுப்பில் இருந்த பூபேஷ் பாகல் தான் காரணம் என்பதால் அவரை முதல்வர் பதவியிலும் அமர்த்தி அழகு பார்த்தது காங்கிரஸ் மேலிடம் .
ஆனால் அடுத்து 4 மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நிலைமை தலைகீழாகி விட்டது. காங்கிரசை படுதோல்வியடையச் செய்து விட்டு எம்.பி. தொகுதிகளை அள்ளியது பாஜக . இதனால் மாநிலத் தலைமை மீது அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பூபேஷ் பாகலிடம் இருந்த மாநிலத் தலைவர் பதவியைப் பறித்து
மோகன் மார்கம் என்பவரை புதிய மாநில தலைவராக கடந்த 28-ந்தேதி அறிவித்தது.
இதனால் புதிய மாநிலத் தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பூபேஷ்பாகல் பங்கேற்றார். அப்போது தொண்டர்களிடையே பாகல், மோகன் மிக கடுமையாக உழைக்கும் மற்றும் எளிமையான மனிதர் என சிரித்தபடி பாராட்டினார். அதன் பின்பு பேசிய பூபேஷ், கடந்த 2013 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், என்னை ராகுல் காந்திஜி தலைவர் ஆக்கினார்.
2014 மக்களவை பொதுத் தேர்தலுக்கு பின், சத்தீஷ்கரில் நாம் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை கடுமையாக உழைத்தோம்.கடந்த 5 வருடங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றிகள் என கூறினார். இதன்பின், தன்னுடன் பணியாற்றியவர்களை பற்றி நினைவு கூர்ந்து சற்று நேரம் கண்ணீர் சிந்தியபடி உருக்கமாக பேசி, எங்கு கூடியிருந்த தொண்டர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.