இரயில்வே நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி இந்தியா முழுவதிலும் உள்ள இரயில் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, அது பற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் அனில் சக்ஷேனா இதனைத் தெரிவித்தார்.
தூங்கும் வசதி கொண்ட இரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள், பகல் நேரங்களிலும் தூங்குவதாக புகார்கள் எழுவதால் இரயில்வே நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இரயிலில் பயணிப்போர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பழைய விதிகளை பின்பற்றாமல் பிரச்சனைகள் எழுந்ததால் புதிய கட்டுப்பாடுகளை இந்தியன் இரயில்வே விதித்துள்ளது. படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட அனைத்து ரயில் பெட்டிகளுக்கும் இந்த புதிய விதிகள் அமலாகிறது.
பிரச்சனையின் சாராம்சம் என்னவென்றால் middle berth கிடைக்கப்பெற்றவர்கள், முன்கூட்டியே தூங்கச் செல்வதால், lower berth-ல் இருப்பவர்கள் செளகரியமாக அமர முடியாத நிலை உள்ளது. உதாரணத்திற்கு, கோவையிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் இரயிலானது இரவு 19.30க்கு கோவையிலிருந்து புறப்படும், இரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் Middle berth-ல் படுக்க வேண்டிய நபர், தான் படுக்க வேண்டும் என்று விரும்பினால் நடுவில் தற்காலிகமாக சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் தனது படுக்கையை, upper berth உடன் சங்கிலியால் இணைத்து, தனது படுக்கையை தயார் செய்து தூங்க சென்று விடுவார்.
அவர் அப்படி சென்றால், upper berth-ல் பயணிக்க வேண்டிய நபர் தனது படுக்கைக்கு சென்றாக வேண்டும், lower berth-ல் உள்ளவரும் கண்டிப்பாக அமர்ந்து பயணிக்க முடியாத சூழல் உருவாகும், குறிப்பாக lower berth-ல் அமர்ந்து சாப்பிடக்கூட முடியாது. தூக்கம் வரும்வரை lower berth-ல் அமர்ந்திருக்கவே பெரும்பாலான upper berth பயணிகள் விரும்புவார்கள், அதைப்போல் middle berth-ல் படுக்க செல்ல வேண்டியவர்களும் எப்போது தன் படுக்கையை தயார் செய்யலாம், எப்போது படுக்கலாம் என்றே யோசித்துக் கொண்டிருப்பார்கள்
அப்போதுதான் வாங்குவாதங்கள் ஏற்பட்டு டிக்கெட் பரிசோதகர்கள் வந்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணவே இரயில்வே நிர்வாகம் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
இதற்கு முன்பு வரை, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், தூங்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், உடல்நிலை சரியில்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பினி பெண்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.