கடவுளை நோக்கிய பயணம்

கடவுள் ஏழைகளுக்கு இறங்குவாரா...???

Sep 17, 2017, 11:21 AM IST

நெடுதூர ரெயில் பயணம், முன்பதிவில்லாத பெட்டியில் குறிப்பிட்ட ஒரு நீளமான இருக்கை, அதில் நெருக்கமாக ஐந்து பேர் கூட அமரலாம், ஆனால் அதில் அமர்ந்து இருப்பதோ, முப்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயதுடைய  மூன்றே பெண்கள், மூன்றங்குல இடைவெளியில் ஒரு சொகுசு பயணம்.

வழக்கத்தை விட நெருக்கடி இன்று குறைவு தான். ஆனால் நின்று பயணிப்பவர்களும் காணப்பட்டார்கள். அது அவர்களது தவறு நான் முதலில் குறிப்பிட்ட மூன்று பேருக்கும் மேலே உள்ள லக்கேஜ் சீட்டில், ரயியின் மேற்கூரை என் தலையில் தட்டாமலிருக்க, தலைகுனிந்தவாறு உட்கார்ந்து இருப்பதால், பலரது நடவடிக்கைகளை கவனிக்க நேரிடுகிறது.

நிற்பவர்களில் யாரையும் அவ்வளவு எளிதில் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். காரணம், இடம் கேட்டுவிடக்கூடாதே! ஆனால், என்னை கண்டுகொள்ள வைத்தது, ஒரு நடக்க முடியாத எழுபது எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் இடம் கிடைக்காத ஏக்க நிலை.

காலருகில் அவர் வைத்திருந்த மஞ்சப்பையும், காலிலிருக்கும் பிஞ்ச செருப்பும் அவரது ஏழ்மையை உணர்தியது. ஜன்னல் கம்பியை பிடிக்க முயற்சிக்கும் ஒரு கையும், வளைந்த முதுகுக்கு அடை கொடுக்கும் இன்னொரு கையும் அவரது இயலாமையை உணர்த்தியது.

எனக்கு கீழிருக்கும் பெண்களுக்கு, அருகில் நிற்கும் மூதாட்டியை குறித்து எந்த கவலையும் இல்லை. அந்த மூதாட்டிக்கு கால்கள் வலித்திருக்க வேண்டும் வாய் திறந்து கேட்டு விட்டார். வாயும் வலித்தது தான் மிச்சம். இடம் எங்கேயிருக்கு நாங்கள் மூன்று மணி நேரம் காத்திருந்து இடம் பிடித்துள்ளோம் என்ற பதிலே என்னுடைய காது வரை வந்து விழுந்தது. இனி அந்த மூதாட்டி புலம்பி என்ன பயன்?

மனிதனுக்கு அருகில் இடம் இருந்தென்ன பயன் மனதில் அல்லவா வேண்டும். சிறிது இடம் கொடுத்தால் நமது பயணம் சலிப்படைந்து விடுமோ என்ற பயம் என் மனதில். இடமிருந்து என்ன பயன்?  என் அருகிலும் இடம் இருந்து என்ன பயன்? நான் இருக்கும் இடத்தில் உட்கார சொல்லி அழைக்கலாம். அது அந்த மூதாட்டியை நக்கல் அடிப்பதாக அமைந்துவிடும். இறைவன் பல நேரங்களில் என்னை வேடிக்கை பார்க்கவே விட்டுவிடுகிறான்.

உடலில் வலிமையும், பையிலும் வங்கியிலும் பணமும், உடன் ஆதரவும் இல்லாத, வயதானவர்களை, உயிரோடு வைத்திருப்பது இறைவனது படைப்பின் மர்மம் தானோ என்னவோ! நான் இறைவனை இங்கு இழுப்பதற்கு காரணம், அந்த மூன்று பேரில் ஒருவரை, மூன்று முறை கவனித்தேன். ரெயிலில் நான் ஏறிய நேரம், எனக்கு தூக்கம் சொக்கிய இரவு நேரம். நான் கண் விழித்த அதிகாலை நேரம், அந்த மூன்று முறையும் அவரது செயல் ஒன்று தான் அது,

காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு, தனது மொபைலில் ஒரு வல்லமையான கிறிஸ்தவ தேவ ஊழியரின் பிரசங்கத்தை, பயபக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தார். நானும் அவர்களது இனம் என்பதால் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்.

"அந்த மூதாட்டிக்கு அரை அடி இடம் கொடுத்தாலே போதுமே, நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு அங்கே கொடுக்கப்படுமே, மனசாட்சி சொல்லவில்லையா, ஒரு நாள் முழுவதும் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஜீவிக்கிறீர்களே, இது ஒரு ஊழியமாக தெரியவில்லையா" இப்படி பல கேள்விகளை கேட்டு, சம்பந்தமில்லாமல் என் மனசாட்சி எனக்கு தொல்லை கொடுக்கிறது.

அந்த மூதாட்டின் வலியை அந்த பெண்ணுக்கு தானே இறைவன் உணர்த்தியிருக்க வேண்டும், எனக்கு உணர்த்தியதில் ஏதும் உள்ளர்த்தம் அடங்கியிருக்குமோ, ஒருவேளை அவர்கள் உணர்ந்தும் உணராதவர்கள் போல இருந்திருப்பார்களோ,  பின்னர் ஆலயம் சென்று மன்னிப்பு கேட்டுக்கொள்வார்களோ, ஒருவேளை இதுவும் கடவுளின் சித்தம் தானோ.!

அப்படியானால் கடவுளே, "நானும் ஒருவேளை ஒரு நாள், முதியவனாகும் போது, எனக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நேராதபடிக்கு, ஏற்ற வேளையில் என்னை எடுத்துக்கொள்ளும்"
-ஆமென்

 

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை