உனக்கு நிகர் இங்கு யாரும் பிறக்கவில்லை. பின்னே ஏன் இறந்தாய்? கரையான் புற்றில் கருநாகங்கள் குடியேறிவிட்டதே! உன்னைப்போலவே உன் சீடர்களும் பொதுவாழ்க்கை வாழ்ந்திருந்தால் உன் புகழ் இன்னும் உயர்ந்திருக்குமே!
நீ தமிழுக்காக செய்த சீர்திருத்தங்களையும், சாதனைகளையும், தமிழினத்திற்காக நீ செய்த தியாகங்களையும் மக்கள் மனதிலிருந்து அழித்து, "பெரியார் என்றால் தமிழனின துரோகி, திராவிடன், வந்தேரி, கடவுள் மறுப்பாளன்" என்றெல்லாம் பேசி உன்னை ஒதுக்கி ஓரங்கட்ட நினைக்கிறார்களே! உன் கொள்கைகளை சொல்லி கொள்ளையடித்து, உன் பெயரை கெடுத்த சண்டாளர்களை சீர்தீர்த்த, இன்னொரு முறை பிறந்து வா, அல்லது என்னைப்போல் ஒருவனிடம் கூடு விட்டு கூடு பாய்ந்து வா!
அதில் உனக்கு நம்பிக்கை இல்லையோ, மன்னித்துவிடு. நீ தான் பிறக்க வேண்டுமென்று இல்லை, நாங்களும் உன் போன்றவர்கள் தானே. எங்களுக்கும் போராட்ட குணம் உண்டு. ஆனால், நாங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் உன்னைப்போல் எங்களுக்கு குடும்பத்தை உதறிவிட்டு பொதுவாழ்க்கை வாழத்தெரியாது எங்கள் குடும்பத்திற்காகத் தானே வாழ்கிறோம் உன்னைப்போல் எங்களுக்கு கடைசி மூச்சு வரை கொடிபிடிக்கத் தெரியாது.
பின்விளைவுகளை நினைத்து பயந்தே பல சந்தப்பங்களில் எங்கள் கைகளை கீழுறக்கிக் கொண்டோம்.
உன்னைப்போல் எங்களுக்கு கடவுளையும் எதிர்க்கத் தெரியாது. கடவுள் பயம் இருப்பதால் தானே ஒழுக்கமாக வாழ்கிறோம். உன்னைப்போல் எங்களுக்கு போரிடத் தெரியாது. தெரிந்தால் ஏன் உன்னை நினைத்து இப்போது புலம்புகிறோம், இதுதான் உன் போர் குணத்திற்கும் எங்கள் போராட்ட குணத்திற்க்கும் உள்ள வேறுபாடு.
உன் போர்ப்படையில் இன்று போராளிகள் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. சுயநலம் இல்லாதவன் தானே சீர்திருத்தவாதியாக முடியும் பணவெறி இல்லாத தலைவன் தானே பெரியாராக முடியும். சுயநலம் தானே எங்களை சுழல வைக்கிறது. பணம் தானே எங்களை பயணிக்க வைக்கிறது.
பின்னே எப்படி நாங்கள் பெரியாராக முடியும், கடைசி வரை சிறியோராகவே மடிந்து விடுவோமோ, உன்னை வாசிப்பவர்களும் சுவாசிப்பவர்களும் எதிர்பார்க்கிறோம். உன்னைப்போல் உயிருள்ள பெரியாரை!