குமாரசாமி அரசு தப்புமா? பாஜகவிலும் கோஷ்டி பூசல்..! எடியூரப்பா முதல்வர் ஆக எதிர்ப்பு

by Nagaraj, Jul 14, 2019, 12:37 PM IST

கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்தது பாஜக வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. குமாரசாமியின் இந்த அறிவிப்பை எதிர்பார்க்காத பாஜக தரப்பு குழம்பிப் போயுள்ளதாகவும், குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைக்கும் எடியூரப்பாவின் பகீரத முயற்சிகளுக்கு, பாஜக எம்எல்ஏக்கள் பலரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.


கர்நாடக அரசியலில், கொள்கையாவது கத்திரிக்காயாவது என்ற ரீதியில் பதவி மோகம், பண ஆசையால் பித்துப் பிடித்து அலைகின்றனர் தற்போதைய எம்எல்ஏக்களில் பலர். அதுவும் தற்போது நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இந்தக் கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்று விட்டது என்றே கூறலாம். பதவி கேட்டு அடம் பிடித்து போர்க்கொடி தூக்குவதும் காரியம் முடிந்தவுடன் சமாதானம் ஆவது என்பது தான் கடந்த 13 மாத கால ஆட்சியில் நடந்து வருகிறது.


இதற்கெல்லாம் காரணம், நூலிழை மெஜாரிட்டியில் ஆட்சி நடைபெறுவது தான்.224 பேர் கொண்ட சட்டப்பேரவையில் மெஜாரிட்டிக்குத் தேவை 113 பேர் .தற்போதைய நிலையில் காங்கிரஸ் 79, மஜத 37 என 116 என்ற நிலையில் 2 சுயேட்சைகள், 1 பகுஜன் சமாஜ் ஆதரவுடன் 119 பேர் பலத்துடன் ஆட்சியில் இருந்தது குமாரசாமி அரசு . பாஜகவோ 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் ஆட்சியை கவிழ்த்து விட முடியாதா என கங்கணம் கட்டிக் கொண்டு கண் கொத்திப் பாம்பாக காத்துக் கிடக்கிறது. இதனால் பதவி, பணம் ஆசை காட்டி தூண்டில் போட்டு வந்தார் பாஜகவின் எடியூரப்பா .


தற்போது அந்தத் தூண்டிலில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கி விட பாஜகவுக்கு கொண்டாட்டமாகி விட்டது. சுயேட்சைகள் இருவரையும் தங்கள் பக்கம் சாய்த்து விட்டது. இதனால் தற்போதைய நிலையில் குமாரசாமி அரசுக்கான பலம் கிட்டத்தட்ட 100 என்ற அளவுக்கு குறைந்து விட்டதால் ஆட்சி கவிழும், நாம் அரியணையில் அமர்ந்து விடலாம் என்ற உற்சாகத்தில் மிதந்தார் எடியூரப்பா . நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து, ஆளுநரின் தயவில் பாஜக அரசு அமைத்து விடலாம் என்பது எடியூரப்பாவின் கணக்காக இருந்தது.


ஆனால் முதல்வர் குமாரசாமியும் சரி, காங்கிரசும் சரி, அதிருப்தியாளர்களை எப்படியும் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் இன்னமும் உள்ளனர். அதனாலேயே அவர்களின் ராஜினாமாவை ஏற்காமல் சபாநாயகர் மூலம் இன்னமும் இழுத்தடிப்பதற்கு காரணமும் கூட என்றும் கூறப்படுகிறது. மேலும் 6 ஆண்டுகளுக்கு தகுதியிழப்பு செய்யப்படுவீர் என்ற அஸ்திரத்தையும் எய்து மிரட்டியிருந்தது காங்கிரஸ். இதனால் தற்போது வரை அதிருப்தியில் இருந்த நாகராஜூ, சுதாகர், ரோஹன் பெய்க் ஆகிய 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சரிக்கட்டப்பட்டு விட்டனர். மேலும் கணிசமானோர் தங்கள் முடிவில் பின்வாங்குவர் என்றும் காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது. அதை விட, பாஜகவில் கணிசமான ஸ்லீப்பர் செல்களை காங்கிரஸ் தயார் நிலையில் வைத்துள்ளதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.


இந்தத் தெம்பில் தான், பாஜக என்ன நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, நானே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்வர் குமாரசாமி முந்திக் கொண்டார் என்று கூறி பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். அநேகமாக நாளையோ, மறுதினமோ சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. குமாரசாமியின் இந்த அதிரடியால் திகைத்துப் போயுள்ள எடியூரப்பா, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை புறக்கணித்து விட்டார். அரக நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வர, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருடைய ஒப்புதல் தேவை. ஆனால் அவர் யோசிப்பதாகக் கூறப்படுகிறது.


மேலும், பாஜகவிலேயே எம்எல்ஏக்கள் பலர் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சி அமைவதற்கு விரும்பவில்லையாம். ஏனெனில் பதவி, பணத்திற்காக விலை போகும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை நம்ப முடியாது. எந்நேரமும் மீண்டும் அவர்கள் தடம் புரளலாம் என்று சந்தேகப்படுவதால், தேர்தல் மூலமே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று உறுதியாக உள்ளனராம். பாஜகவில் தற்போது எழுந்துள்ள இந்த உட்கட்சிப் பூசலால் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா முடிவை எந்நேரமும் கைவிடலாம் என்றும், குமாரசாமி அரசு தப்பிப் பிழைக்க வே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும், அடுத்த 2 நாட்களில் இதற்கான முடிவு கர்நாடக அரசியலில் தெரிந்து விடத்தான் போகிறது.


Speed News

 • டெல்லி, மும்பை, சென்னையில்

  கட்டுப்படாத கொரோனா பரவல்

  இந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 

  டெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.  மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.  

  Jul 6, 2020, 12:49 PM IST
 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

  11,300 வென்டிலேட்டர்கள் சப்ளை

  கொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன. 

  இந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார். 

  Jul 4, 2020, 14:34 PM IST
 • சாத்தான்குளம் வழக்கில் 

  மேலும் 4 பேர் கைது

  சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.

  இந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  Jul 4, 2020, 14:30 PM IST
 • அமைச்சர் மனைவிக்கு கொரோனா..

  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

  ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  Jul 4, 2020, 14:26 PM IST
 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST