சந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது?

Chandrayaan-2 launching stopped last minute due to technical fault

by Nagaraj, Jul 15, 2019, 13:28 PM IST

இன்று அதிகாலை விண்ணில் ஏவப்படுவதாக இருந்த சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விண்ணில் ஏவப்படவில்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பின் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா? மனிதன் வாழும் சூழல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான அடையாளங்களை சந்திரயான்-1 கண்டுபிடித்தது. இதையடுத்து, நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக,978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய லேண்டர், ரோவர் என்று அந்த விண்கலத்தில் 3 பெரிய கருவிகள் இடம்பெற்ளிருந்தன. இவற்றில் அதிநவீன கேமராக்கள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன.ஓராண்டு ஆய்வில் ஈடுபடக் கூடிய ஆர்பிட்டரின் எடை மட்டுமே 2.4 டன்னாகும். எனவே, மிக அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்பும் ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்டில் சந்திரயான்-2 வி்ண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்கலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
இந்த விண்கலம் 50 நாட்கள் பயணம் செய்து, நிலவின் தெற்கு துருவத்தில் செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி தரையிறங்கும் என்று கூறப்பட்டிருந்தது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை அறிவதற்கு இந்த விண்கலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். மேலும், நிலவின் பரப்பு குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருந்தது. நிலவின் தென்பகுதிக்கு உலகில் எந்த நாடும் விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்- 2 விண்கலம், விண்வெளி உலகில் முக்கிய சாதனை திட்டம் என்பதால், சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகம், ஆந்திரா ஆளுநர்கள், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் ஆராய்ச்சி மையத்தில் எதிர்பார்ப்புகளுடன் திரண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 56 நிமிடங்கள் முன்னதாக, அதாவது 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

ஏவுகணையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்கலம் நிறுத்தப்படுவதாக இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது. மேலும் சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் ஏவப்படும் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாயும்; கவுன்டவுன் தொடங்கியது

You'r reading சந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை