சந்திரயான்-2 செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தில் இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என்றும் திட்டமிட்டபடி நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரித்துள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சியில், உலகின் எந்த நாடும் நிலவின் தென் துருவப் பகுதியை இதுவரை ஆராய்ந்தது இல்லை. அந்தச் சாதனையை முதன்முதலாக இந்தியா படைக்க உள்ளது. இதற்காக ரூ.1000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘சந்திரயான்-2’ விண்கலம், இஸ்ரோ விஞ்ஞானிகளின் அரிய முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 15-ந் தேதி அதிகாலை இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கவுண்ட்டவுனும் நடந்து வந்தது. இந்தச் சாதனை நிகழ்வை நேரில் காண குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் ஸ்ரீஹரிகோட்டாவில் கண் விழித்து காத்திருந்தனர். ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு கடைசி நேரத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறை, இஸ்ரோ விஞ்ஞானிகள் சரி செய்து விட்டனர். இதையடுத்து நாளை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்துடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலம் நாளை மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று மாலை மணிக்கு தொடங்குகிறது. கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.