யாருக்கும் தெரியாமல் ஆபாச இணையதளங்களை பார்ப்பது சாத்தியமல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற தளங்களை பார்ப்பவர்கள் பற்றிய தகவல் மூன்றாம் நபர் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதாகவும், தரவுகள் விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
'இன்காக்னிடோ' (incognito) போன்ற முறைகளை கையாண்டு தளங்களை பார்ப்போர், தாங்கள் எந்தெந்த இணையதளங்களை பார்க்கிறோம் என்பது பற்றிய தரவுகள் வேறு யாருக்கும் தெரியாது என்று நம்புகின்றனர். அந்த நம்பிக்கை தவறானது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இரண்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செய்த ஆய்வு தெரிவித்துள்ளது.
கற்பனையான ஒரு பயனர் கணக்கை கொண்டு ஆய்வில் ஈடுபட்ட குழுவினர், பல்வேறு இணையதளங்கள் கொடுத்துள்ள தனியுரிமை கொள்கைகளை கடந்து பயனர்களின் தகவல் பகிரப்படுவதை கண்டறிந்துள்ளனர். 2017ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, நெட்பிளிக்ஸ், அமேசான் மற்றும் டிவிட்டர் ஆகிய தளங்களை பார்வையிட்டிருக்கும் ஒட்டு மொத்த பயனர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஆபாச இணையதளங்களை கூடுதல் பயனர்கள் பார்த்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இணைய உலகில் பகிரப்படும் தரவுகளில் 30 விழுக்காடு ஆபாசம் குறித்தவை என்றும் அறிக்கை கூறுகிறது.
ஆய்வாளர்கள் வெப்எக்ஸ்ரே (webXray) என்னும் கருவியை பயன்படுத்தி 22,484 ஆபாச இணையதளங்களை ஆய்வு செய்ததில் 93 விழுக்காடு தளங்கள் பயனர்களின் இணைய நடவடிக்கையை பின்தொடர்வதும், மூன்றாம் நபர் நிறுவனங்களுக்கு பயனர்களின் தரவுகளை பகிர்ந்து கொள்வதும் தெரிய வந்துள்ளது. பயனர்களின் இணைய நடவடிக்கைகளின் மாதிரியை கொண்டு 230 நிறுவனங்கள் பின்தொடர்கின்றன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஆபாசமல்லாத இணைய சேவை நிறுவனங்களும் ஆபாச தள பயனர்களை பின்தொடருகின்றன. கூகுள் 74 விழுக்காடு, ஆரக்கிள் 24 விழுக்காடு, ஃபேஸ்புக் 10 விழுக்காடு ஆபாச தளங்களை கண்காணிக்கின்றன. பயனர்களின் இணைய நடவடிக்கையை தொடருவதில் ஆபாச தளங்களும் ஆர்வம் காட்டுகின்றன. எக்ஸோகிளிக் 40 விழுக்காடு, ஜூஸிஆட்ஸ் 11 விழுக்காடு மற்றும் ஈரோஅட்வர்டைசிங் 9 விழுக்காடு என்ற கணக்கில் பயனர்களை கண்காணிக்கின்றன. தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் உலகில் எதுவுமே இரகசியம் இல்லை என்பதை புரிந்துகொள்வது அவசியம்.