உங்க குட்டிப் பாப்பாவுக்கு என்ன கொடுக்குறீங்க? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

by SAM ASIR, Jul 21, 2019, 19:52 PM IST
Share Tweet Whatsapp

குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் ஆறு மாதங்களுக்குக் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைக்கவேண்டாமென குழந்தை, மகப்பேறு மருத்துவர்களையும், உணவியல் வல்லுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் தாய்ப்பால் கொடுப்பதையும் வீட்டில் தயாரிக்கும் சத்துள்ள உணவுகளை கொடுப்பதை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது.


சந்தையில் கிடைக்கும் குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை ஆய்வு செய்த பிறகு இந்த அறிவுரையை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கான உணவாக சந்தையில் கிடைப்பவற்றில் உள்ள ஆற்றலில் (கலோரி) 30 விழுக்காட்டுக்கும் மேலான பங்கு சர்க்கரையின் வாயிலாக கிடைக்கிறது என்பதும், இத்தயாரிப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் கூடுதல் சர்க்கரை மற்றும் சுவையூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
சுகாதாரம் பெரும் சவாலாக விளங்கிய காலகட்டத்தில் பரவலாக இருந்த நோய்தொற்றை கருத்தில் கொண்டு இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுபொருள்கள் பரிந்துரைக்கப்பட்டன. காலப்போக்கில் பதப்படுத்தலின்போது அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. குழந்தை பருவத்திலிருந்து அதிக சர்க்கரை சேர்ப்பதால் உடல் பருமனாகிறது. இரண்டு வயது வரைக்கும் சுவை மொட்டுகள் வளர்ச்சியடைகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளது இயற்கையான சர்க்கரையாகும். சந்தையில் கிடைக்கும் குழந்தைகளுக்கான உணவில் 30 விழுக்காடு மறைவான சர்க்கரையே என்றும் கருதப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற உணவுகளில் சுக்ரோஸ், கார்ன் சிரப் எனப்படும் சோளத்தின் ஸ்டார்ச்சிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் மால்டோடெக்ஸ்ரின் ஆகியவை சேர்க்கப்படுகிறது. இவை அதிக இனிப்பை கொடுப்பதோடு உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகிறது.


தாய்ப்பால் போதாத நிலை ஏற்பட்டால், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்க தாய்மார் இவ்வகை உணவுகளை சார்ந்திருக்கவேண்டியுள்ளது. ஆகவே, ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் இவ்வகை பதப்படுத்தப்பட்ட உணவுகளை பயன்படுத்தத்தக்க அளவு குறித்து வழிகாட்டுவதும், உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தும் துறைகள் உணவில் சேர்க்கப்படும் பொருள்களின் அளவுகளை கண்காணிப்பதும் அவசியம்.


தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டிய ஆறு மாதங்களும் பாலூட்டும் தாய் போதிய ஊட்டச்சத்துமிக்க உணவினை சாப்பிடவேண்டும்.
தற்போதுள்ள சமுதாய நோக்கில் நோய்தொற்று மற்றும் ஊட்டச்சத்து குறைவினை தடுப்பதை காட்டிலும் உடல் பருமனாவதையும் தொற்றாத நோய்கள் உருவாவதை தடுப்பதை நோக்கியே கவனம் குவிந்திருக்கிறது.


அதிகப்படியான சர்க்கரை சேர்ந்த உணவை கொடுக்கப்படுவதுடன் குழந்தைகளுக்கு உடல் செயல்பாடு குறைவாக இருப்பதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எப்போதும் மடியிலும், தள்ளுவண்டியிலும் இருப்பதால் குழந்தைகள் தவழுவதற்கு தருணம் வழங்கப்படுவதில்லை. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஒரு நாளில் ஒன்றரை மணி நேரமாவது (180 நிமிடங்கள்) குழந்தைகள் தவழ வேண்டியது அவசியம் எனவும் குழந்தை நல நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


Leave a reply