இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அவர் காஷ்மீருக்கு சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.
இந்திய ராணுவத்தில் எல்லைப்படைப் பிரிவில்(டெரிட்டோரியல் ஆர்மி) பிரபலங்களுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியும் தரப்படும். ஆனால், அவர்கள் நேரடியாக ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். ஏற்கனவே நடிகர் மோகன்லால் உள்பட பலர் அந்த பதவியில் இருந்து ராணுவப் பயிற்சி பெற்று இருக்கிறார்கள்.
இந்நிைலயில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, டெரிட்டோரியல் ஆர்மி லெப்டினன்ட் கர்னல் பதவி தரப்பட்டது. அவர் அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடி வந்தார். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோல்வியுற்ற பின்பு, டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும், ஜார்கண்டில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற் கொள்ளவிருக்கும் இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், ராணுவப் பயிற்சி மேற்கொள்ளுவதற்கு டோனிக்கு ராணுவ தளபதி அனுமதி வழங்கியுள்ளார். ராணுவ வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டோனி லெப்டினன்ட் கர்னலாக உள்ள பாரசூட் ரெஜிமென்ட் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. ஆனால், இப்போது அந்த ரெஜிமென்ட், ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதியில் பயிற்சியில் உள்ளது. எனவே, டோனி விரைவில் அங்கு சென்று பயிற்சியை பெறலாம் என கூறப்படுகிறது. ஆனால் ராணுவ நடவடிக்கைகளில் அவர் நேரடியாக பங்குபெறமுடியாது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு