உயர உயர பறக்க கனவு காணுங்கள் கனவை நினைவாக்குங்கள் பன்முக நாயகன் அப்துல் கலாமின் தாரக மந்திரம்

APJ Abdul Kalams 4th death anniversary, some memories about Kalam

by Nagaraj, Jul 27, 2019, 10:10 AM IST

எந்த ஒரு மெகா இலக்கையும் அடைய முடியும் என கனவு காணுங்கள்... கனவை நினைவாக்க பாடு படுங்கள்.. அப்புறம் வானமும் வசப்படும் என்ற தாரக மந்திரத்தை உரக்க விதைத்த மாமனிதர். உலகம் போற்றும் தலை சிறந்த விஞ்ஞானி.சாமான்ய குடும்பத்தில் பிறந்தாலும் அயராத முயற்சியாலும், உழைப்பாலும் புகழின் உச்சம் தொட்ட மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் அவரைப் பற்றிய சில நினைவுகள்.

இந்தியாவின் தெற்கு மூலையில் தமிழகத்தின் ஒரு சின்னஞ்சிறு தீவான ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் தான் அப்துல் கலாம் . கடின முயற்சி,உழைப்பால் வாழ்வின் எந்த உயரத்திற்கும் பறக்கலாம் என்பதை சாதித்துக் காட்டிய மாபெரும் மனிதர். சின்னஞ்சிறு வயதில் பட்டம் பறப்பதை வியப்பாக பார்த்து வானில் பறக்க ஆசைப்பட்டு, பிற்காலத்தில் இந்தியா, வான்வெளியிலும், விண்வெளியிலும் ஏவுகணைகளையும், ராக்கெட்டுகளையும் பறக்க விட காரணகர்த்தாவாக திகழ்ந்த அற்புத விஞ்ஞானி.

சாமான்யனும் உழைப்பால், திறமையால், முயற்சியால் நாட்டின் முதல் குடிமகன் எனும் குடியரசுத் தலைவர் பதவிக்கும் முன்னேறலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய மகான். இறுதி வரை எளிமையே வாழ்க்கை என வாழ்ந்து மக்களின் ஜனாதிபதி என்ற புகழுடன் மறைந்த கலாமின் புகழ் காலம் காலத்துக்கும் மக்களின் மனதில் தீங்காது நிறைந்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

அப்துல் கலாம் 1931 அக்டோபர் 15-ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை ராமேஸ்வரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயின்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாம், சிறு வயதிலேயே அதிகாலையில் வீடு, வீடாகச் சென்று செய்தித்தாள்களை விநியோகித்து, பெற்றோருக்கு சிறிது வருவாய் ஈட்டிக் கொடுத்தார்.பள்ளிப் படிப்பின் போது சராசரி மாணவனாகத்தான் இருந்தார். ஆனால் அப்பொழுதே விண்ணில் பறக்க ஆசைப்பட்டு கனவு காண ஆரம்பித்தார்.

கனவை நனவாக்க அது தொடர்பான படிப்புகளை தேர்ந்தெடுத்தார்.1954-ல் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை எம்.ஐ.டியில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்தார்.1958ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் விண்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக, இந்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் இணைந்தார். 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அப்போது எஸ்.எல்.வி III ராக்கெட்டைக் கொண்டு, ரோகினி-I என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான பங்களிப்பால், 1981ல் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருதைப் பெற்றார். இதையடுத்து பத்ம விபூஷன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1992ல் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1997-ல் இந்தியாவின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருதைப் பெற்றார். 1998ஆம் ஆண்டு மே 11ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக நாடுகள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்தியாவின் பெருமையை உயர்த்தினார். 2002-ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்வானார். 2007-ம் ஆண்டு இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி கிங் சார்லஸ் 2 பதக்கம் வழங்கியது.

2011-ம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது. ஏனெனில் தான் செல்லும் இடமெங்கும் மாணவர்களைத் தேடிச் சென்று, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். கனவு காணுங்கள். அந்த கனவு உங்களை உறங்க விடாமல் செய்ய வேண்டும். இளைஞர்களே வருங்காலத்தின் தூண்கள். அவர்கள் சமூகப் பணி ஆற்றுவது அவசியம்.

குழந்தைகள் பேணிக் காக்கப்பட வேண்டும் என்று எப்போதும் கூறிக் கொண்டே இருப்பார். மாணவர்களுக்காக இடைவிடாது இயங்கிக் கொண்டிருந்த கலாம், 2015 ஜூலை 27-ல், மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது, மேடையிலேயே சரிந்து உயிர் விட்டார். மக்கள் ஜனாதிபதி என்று போற்றப்பட்ட மாமனிதர் அப்துல் கலாம் மறைவுக்கு நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவர் மறைந்து நான்காண்டுகள் ஆனால் என்ன.. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரின் கனவு காணுங்கள் எனும் தாரக மந்திரம் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி ஒரு அற்புத மனிதரை நாடு இனி காணப்போவதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.

கார்கில் போர் வெற்றி தினம்: இந்திய படைகளின் வீரம், துணிச்சலுக்கு தலை வணங்குவோம்; ஜனாதிபதி புகழாரம்

You'r reading உயர உயர பறக்க கனவு காணுங்கள் கனவை நினைவாக்குங்கள் பன்முக நாயகன் அப்துல் கலாமின் தாரக மந்திரம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை