இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்தது ஏன்? மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் தீவிர விசாரணை

Indian foreign ministry officials conducting enquiries with Maldives ex vice President ahamed adheep in Tuticorin:

by Nagaraj, Aug 2, 2019, 14:11 PM IST

எந்தவித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக கப்பலில் வந்து தூத்துக்குடியில் பிடிபட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப்பிடம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 11-ந் தேதி மாலத்தீவுக்கு விர்கோ என்ற சரக்கு கப்பல் கருங்கற்களை ஏற்றிச் சென்றது. அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த நிக்கோலஸ் பிரிட்டோ என்ற மாலுமியுடன் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 9 கப்பல் ஊழியர்கள் சென்றனர். சரக்கை இறக்கிவிட்டு மாலத்தீவில் இருந்து கடந்த 27-ந் தேதி கப்பல் மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அப்போது ஆவணமின்றி ஒரு மர்ம நபர் நடுக்கடலில் கப்பலில் ஏறியுள்ளார். இது குறித்து கப்பலில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த விர்கோ சரக்கு கப்பலை நடுக்கடலில் வழிமறித்த கடலோர காவல்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கப்பலில் இருந்த மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில், மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரியவந்தது.இதையடுத்து
அந்த கப்பலை சிறைப்பிடித்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு ரா உளவுப் பிரிவு அதிகாரிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று வெளியுறுவுத் துறை உயர் அதிகாரிகள் தூத்துக்குடி வந்து அகமது அதீப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தப்பி வந்தது ஏன்? இந்தியாவில் அடைக்கலம் புகும் நோக்கில் வந்தாரா? என்பது குறித்தெல்லாம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் அகமது அதீப் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட அகமது அதீப், கடந்த 2015-ம் ஆண்டு மாலத்தீவு துணை அதிபராக இருந்தவர். அதே ஆண்டு மாலத்தீவின் அப்போதைய அதிபர் அப்துல்லா யமீனை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயன்றதாக, துணை அதிபர் பதவியில் இருந்த அகமது அதீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அகமது அதீப்புக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. தற்போது வீட்டுக் காவலில் இருந்த அவர் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு தப்பி வந்து பிடிபட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட உன்னோவ் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு, சிஆர்பிஎப் பாதுகாப்பு; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

You'r reading இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்தது ஏன்? மாலத்தீவு முன்னாள் துணை அதிபரிடம் தீவிர விசாரணை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை