குஜராத்தில் சிக்கித் தவித்த 15 வயது சிறுமி ஒருவரை விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வெள்ளத்தின் நடுவே, அந்தரத்தில் கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி துணிச்சலாக அந்தச் சிறுமி ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தாண்டு தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், பல பகுதிகள் வெள்லிக் காடாகியுள்ளன.
இதில் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகள் 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பல கிராமங்களில் மக்கள் வெள்ளத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன். வதோதரா, செளராஷ்டிரா, சூரத், ஜாம் நகர் மாவட்ட கிராமங்களில் தத்தளிக்கும் மக்களை இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மீட்டு வருகிறது.
இந்நிலையில் 15 வயது சிறுமி ஒருவரை துணிச்சலாக மீட்கும் காட்சியை, வீடியோவாக விமானப் படை வெளியிட்டுள்ளது. ஜாம்நகர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் கடல்போல் காட்சியளிக்கும் வெள்ளத்தின் நடுவே அந்தச் சிறுமி கயிற்றைப் பிடித்து, அந்தரத்தில் துணிச்சலாக ஊசலாடியபடி சென்று ஹெலிகாப்டரில் ஏறும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.