முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு யமுனை நதிக்கரையில் நடைபெறுகிறது.வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, அவசரமாக நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் நாளை தான் இந்தியா திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவருடைய மரணச் செய்தி கேட்டவுடன் பாஜக தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பின்னர் அருண் ஜெட்லியின் உடல் தற்போது தெற்கு டெல்லியில் கைலாஷ் காலனியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெட்லியின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், ஜெட்லியின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
ஜெட்லியின் உடல் காலை 10 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு பாஜக தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இறுதிஅஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பின் பிற்பகல் 2 மணிக்கு ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யமுனை நதிக்கரையில் உள்ள நிகாபோத் காட் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
ஜெட்லியின் மறைவைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்புவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஏற்கனவே திட்டமிட்டபடி பஹ்ரைனில் நடைபெறும் ஜி.7 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாளை தான் பிரதமர் மோடி நாடு திரும்புவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அருண் ஜெட்லி உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்துவார் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர் மோடி நீண்ட கால நண்பரை இழந்து விட்டேன். அவரது மறைவு பெரும் வருத்தமளிக்கிறது என்று இரங்கல் தெரிவித்திருந்தார். அத்துடன் அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோஹன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். அத்துடன் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்புவதாக மோடி தெரிவித்துள்ளார். ஆனால் ஜெட்லியின் குடும்பத்தாரோ, வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால், பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.