வாஜ்பாய் முதல் ஜெட்லி வரை... ஒரே வருடத்தில் முக்கிய தலைவர்கள் பலரை இழந்த பாஜக

by Nagaraj, Aug 25, 2019, 11:56 AM IST
Share Tweet Whatsapp

கடந்தாண்டு ஆகஸ்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பின் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், மதன்லால்குரானா , சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி என முக்கியத் தலைவர்களை இழந்த பெரும் சோகத்தில் பாஜக உள்ளது.

1980-ல் பாஜக ஆரம்பிக்கப்பட்ட போது முக்கிய தளபதிகளாகத் திகழ்ந்த முக்கியத் தலைவர்கள் பலர் கடந்த ஒரு வருடத்தில் மரணமடைந்துள்ளது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் அளித்துள்ளது என்றே கூறலாம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை மரணத்தை தழுவிய பாஜக முக்கியத் தலைவர்களின் பட்டியல் இதோ:

அடல் பிகாரி வாஜ்பாய்: நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர்.1957 முதல் சுமார் அரை நூற்றாண்டு காலம் தொடர்ந்து இவரது குரல் நாடாளுமன்றத்தில் இவரது குரல் ஒலித்தது. சிறந்த பார்லிமென்டேரியன் என போற்றப்பட்ட வாஜ்பாய் 3 முறை பிரதமர் பதவியும் வகித்தவர். பாஜகவை தோற்றுவித்த தலைவர்களில் முக்கியமானவர். 93 வயதில், வயது மூப்பு நோய் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி வாஜ்பாய் காலமானார்.

மதன்லால்குரானா: இவரும் பாஜகவை தொடங்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர். டெல்லி முதல்வராக, மத்திய அமைச்சராக, கட்சியிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்த குரானா, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 83 வயதில் காலமானார்.

அனந்தகுமார் : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் பாஜக காலூன்ற முக்கிய பங்காற்றியவர். 1996 முதல் தொடர்ந்து 6 முறை பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வான ஆனந்த குமார் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். புற்றுநோய் பாதிப்பால் 59 வயதில், கடந்தாண்டு நவம்பரில் மரணத்தை தழுவினார்.

மனோகர் பாரிக்கர் : கோவாவில் பாஜகவை காலூன்றச் செய்த பாரிக்கர், கடந்த முறை பிரதமர் மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்தார். பின்னர் கோவா முதல்வரானார். இவரும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி ஒரு வருடத்திற்கும் மேல் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. கடந்த மார்ச் 17-ம் தேதி 63 வயதில் காலமானார்.

சுஷ்மா ஸ்வராஜ் : இவரது மறைவு தான் பாஜகவினரை நிலைகுலையச் செய்துவிட்டது எனலாம். பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பெண்களில் இவர் முதன்மையானவர். கடந்த முறை மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். சிறுநீரக பாதிப்பால் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒதுங்கி விட்டார். 67 வயதான சுஷ்மா, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த 6-ந் தேதி, நொடியில் மரணத்தை தழுவியது பாஜகவினருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்து விட்டது.

அருண் ஜெட்லி : இவரும் பாஜக ஆரம்பித்த காலம் முதலே முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான ஜெட்லி, அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சர் பொறுப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர காரணமாக இருந்தார். இவரும் உடல் நிலை பாதிப்பால் இம்முறை மோடி அமைச்சரவையில் பங்கெடுக்கவில்லை. கடந்த 15 நாட்களாக உடல் நிலை மோசமான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், 66 வயதில் மரணத்தை தழுவியுள்ளார்.

ஒரே வருடத்தில் இப்படி கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் உயிரிழந்தது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a reply