காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி

How long will this continue? Priyanka Gandhi questions in twitter about Kashmir issue

by Nagaraj, Aug 25, 2019, 18:26 PM IST

தேசியவாதம் என்ற பெயரில் காஷ்மீரில் மக்கள் நசுக்கப்பட்டு மவுனமாக்கப்படும் அவலம் எத்தனை நாளைக்கு தொடரும் என, காஷ்மீர் பெண் ஒருவர் ராகுல் காந்தியிடம் கதறி அழும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு பிரியங்கா காந்தி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு, 20 நாட்களுக்கு முன்பு மேற்கொண்டது. அது முதல் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டு, ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு, அம்மாநிலத்திற்குள் வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் 20 நாட்களாக காஷ்மீரில் நடப்பது என்ன? என்பது வெளியுலகுக்கு மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த 12 தலைவர்கள் குழு ஒன்று நேற்று காஷ்மீருக்கு சென்றது. ஆனால் 144 தடையுத்தரவை காரணம் காட்டி ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராகுல் உள்ளிட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் விமானத்தில் மீண்டும் டெல்லி திரும்பிய ராகுல், தன்னுடன் பயணித்த காஷ்மீர் மாநில பெண்களுடன் உரையாடினார். அப்போது ஒரு பெண் கதறியழுதபடி, காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் பற்றி விவரிக்கிறார். ராகுலுடனான காஷ்மீர் பெண்ணின் இந்த உரையாடல் வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி படு வைரலாகி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டுவிட்டரில் இந்த வீடியோவை இணைத்து வெளியிட்டு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில், விமானத்தில் ராகுல் காந்தியிடம் காஷ்மீர் குறித்து அந்தப்பெண் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காஷ்மீரில் தானும், தன்னுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அந்தப் பெண் பேசியுள்ளார்.
இதைக் குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, இன்னும் எத்தனை நாட்களுக்கு இது தொடரப்போகிறது? லட்சக்கணக்கான மக்கள் தேசியவாதம் என்ற பெயரில் மவுனமாக்கப்பட்டு, நசுக்கப்படுகிறார்கள்! எனக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் பிரியங்கா காந்தி, காஷ்மீர் பிரச்னையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று குற்றம்சாட்டுகின்றனர். காஷ்மீரில் ஜனநாயக அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்யாமல் மறுப்பதைக்காட்டிலும் அரசியல் செய்வது ஒன்றும் தேசவிரோதம் இல்லை.
இந்த விஷயத்துக்கு அனைவரும் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்பவது ஒவ்வொருவரின் கடமை. இதனை செய்வதை நாங்கள் ஒரு போதும் நிறுத்தமாட்டோம் எனவும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

You'r reading காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை