துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியா? மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி நிதியுதவி பற்றி ராகுல் விமர்சனம்

PM FM are clueless about how to solve economic disaster, stealing from RBI wont work: Rahul Gandhi on twitter:

by Nagaraj, Aug 27, 2019, 14:02 PM IST

மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

முன்னெப்போதும், இல்லாத அளவுக்கு மத்திய அரசு பெரும் நிதிச்சுமையில் சிக்கித் தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொருளாதாரமும் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு காண ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை வழங்க வேண்டும் சில மாதங்களுக்கு முன்னர் அழுத்தம் கொடுத்தது. இதனால் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு, 3 முதல் 5 ஆண்டு இடைவெளியில் ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்றும், இதன் மூலம் அரசு தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும் பரிந்துரைத்தது .

இந்தப் பரிந்துரையை ஏற்று, தனது இருப்பில் உள்ள உபரி நிதியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதற்கு ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு நேற்று ஒப்புதலும் வழங்கியதாக
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்றுள்ளதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார் . இது குறித்து ராகுல் காந்தி தமது டுவிட்டர் பதிவில், தற்போதைய பொருளாதார சீரழிவுக்கு காரணமே பாஜக தான். தங்களாலேயே ஏற்படுத்தப்பட்ட இந்த சீரழிவை சரிப்படுத்த வழி தேட முடியாமல் பிரதமரும், நிதியமைச்சரும் தவிக்கின்றனர்.

அதற்காக, நிதிச் சுமையை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை பெறுவது தீர்வாகிவிடாது. இது, துப்பாக்கி குண்டு காயம் பட்டவனுக்கு சாதாரண டிஸ்பென்சரியில் பிளாஸ்திரியை (Band-aid) ஒட்டி காயத்தை மறைப்பது போன்ற செயலாகும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி

More India News