ஜம்மு காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை படிப்படியாக விடுதலை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மொகரம் பண்டிகையை ஒட்டி, சில தலைவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ஆக. 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, அவர்களை படிப்படியாக விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம், மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதனால், அவர்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என்று நம்பக் கூடிய சில தலைவர்களை மட்டும் அடுத்த வாரம் மொகரம் பண்டிகையை ஒட்டி விடுதலை செய்ய மாநில அரசு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதன்படி, மக்கள் மாநாட்டு கட்சித் தலைவரும், பிடிபி-பிஜேபி கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவருமான இம்ரான் அன்சாரி விடுதலை செய்யப்பட உள்ளார். ஷியா முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இவரை விடுவிப்பதன் மூலம், மொகரம் ஊர்வலங்களின் போது அமைதியை ஏற்படுத்த முடியும் என்று மாநில அரசு கருதுகிறது. காரணம், மொகரம் ஊர்வலங்களில் பிரிவினைவாத கோஷங்கள் எழுப்பப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. அதனால், அதை தடுப்பதற்கு அரசு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதே போல், தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த அலிமுகமது சாகர், பிடிபி கட்சியைச் சேர்ந்த நயீம் அக்தர் உள்ளிட்டவர்களை முதல் கட்டமாக விடுவிக்க அரசு யோசித்து வருகிறது. தற்போது தேசிய மாநாட்டு கட்சி நிர்வாகிகள் 70 பேர், பிடிபி கட்சி நிர்வாகிகள் 79 பேர், மக்கள் மாநாடு கட்சியைச் சேர்ந்த 12 பேர், காங்கிரசைச் சேர்ந்த 12 பேர் என்று 173 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் காவலில் உள்ளனர். பலர் காவலில் வைக்கப்பட்டுள்ள சென்டார் ஓட்டல் தற்போது சப் ஜெயிலாகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 24வது நாளாக இன்றும் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு முழு அமைதி நிலவுகிறது.
காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சில நாட்கள் அவகாசம் தேவை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை