கோவையில் லஸ்கர் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலின் பேரில், என்ஐஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக கடந்த வாரம் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இலங்கையிலிருந்து கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், தமிழகத்தில் குண்டு வெடிப்பு போன்ற சதி வேலைகளில் ஈடுபடலாம் என்ற தகவலால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.ரயில், விமான நிலையங்கள் மட்டுமின்றி மக்கள் அதிகமாக கூடும் வழிபாட்டு ஸ்தலங்கள், சுற்றுலா இடங்கள் என முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.
இதில், முக்கியமாக கோவை நகரை தீவிரவாதிகள் குறிவைத்து அங்கு பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாகவே கோவை நகரம் முழுவதும் மோப்ப நாய்களுடன் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கோவை நகரமே பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் பேரில் 20-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 25-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை முதல் கோவையின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதைக் குறிவைத்து கோவை அல் அமீன் காலனி, பிலால் எஸ்டேட், ஜி.எம்.நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனை நடை பெற்று வருகிறது. இந்தச் சோதனையில் சந்தேகப்படும் சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் லேப்டாப்புகள், மொபைல் போன்கள், ஏராளமான சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.