ஹெல்மெட் போடாதவருக்கு அபராதம் ரூ.23 ஆயிரம்: டெல்லி போலீஸ் அதிரடி

Share Tweet Whatsapp

டெல்லியில் ஹெல்மெட் போடாமல் மோட்டார் பைக்கில் சென்றவருக்கு போக்குவரத்து போலீசார், ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆச்சரியமாக இருக்கிறதா?

டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் தினஷே் மதன் என்பவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியாததால், போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தினர். அதன்பின்பு, வழக்கம் போல் தங்கள் வேலையைக் காட்டினர். டிரைவிங் லைசென்ஸ் எடு...  ஆர்.சிபுக் எடு... இன்சூரன்ஸ் எடு... என்று வரிசையாக கேட்டனர்.

அதற்கு தினேஷ் மதன், அதெல்லாம் நான் எடுத்து வரவில்லை. ஹெல்மெட் போடாததற்கு அபராதம் கட்டி விடுகிறேன் சார் என்றார். ஆனால், போலீசார் அதை காதில் வாங்கவில்லை. டிரைவிங் லைசென்ஸ் இல்லாததற்கு ரூ.5000, ஆர்.சி.புக் இல்லாததற்கு ரூ.2000, இன்சூரன்ஸ் இல்லாததற்கு ரூ.10,000, ஹெல்மெட் போடாததற்கு ரூ.1000, மாசு சான்று வாங்காததற்கு ரூ.1000 இப்படியே போய் ரூ.23 ஆயிரம் அபராதம் போட்டு சலான் கொடுத்தார்கள். அதை நீதிமன்றத்தில் கட்டுமாறு கூறிவிட்டார்கள்.

இது குறித்து தினேஷ் மதன் கூறுகையில், என்னிடம் லைசென்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ் என்று எல்லாவற்றையும் 10 நிமிடத்தில் கொடுக்கச் சொன்னார்கள். அது முடியாது என்றேன். உடனே இவ்வளவு போட்டு தீட்டி விட்டார்கள் என்றார்.

இப்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால், வாகன ஓட்டிகள் எல்லாவற்றையும் தயாராக வைத்து கொண்டு, ஹெல்மெட் போட்டுக் கொண்டு செல்வது நல்லது.

 


Leave a reply