காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை சந்திப்பதற்கு அவரது மகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் காஷ்மீரில் வன்முறை, கலவரம் வெடிக்கக் கூடாது என்பதற்காக காஷ்மீரில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று கோரி, அம்மாநில பத்திரிகையாளர்கள் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
அதே போல், மெகபூபா முப்தியின் மகள் சானா இல்திஜா ஜாவேத் தனது தாயாரை சந்தித்து பேச அனுமதி தர வேண்டுமென்று கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இல்திஜா, ஸ்ரீநகருக்கு சென்று காவலில் வைக்கப்பட்டிருக்கும் அவரது தாயார் மெகபூபாவை சந்திக்கலாம் என்று அனுமதி அளித்தது.