முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு திகார் சிறையில் 7ம் நம்பர் செல் ஒதுக்கப்பட்டது. இரவு உணவாக ரொட்டி, சப்ஜி, பருப்பு குழம்பு தரப்பட்டது.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. கடந்த 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் தாக்கல் செய்த மனுக்களின் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தன.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு தொடுத்துள்ள வழக்கில், சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, சிபிஐ காவல் முடிந்து சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு சிபிஐ காவல் முடிந்ததால், ஜாமீனில் விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நீதிபதி ஏற்கவில்லை. அதையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு வழக்கின் விசாரணைக்கு அனுப்புமாறு என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமலாக்கப்பிரிவு வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்படாததால், அதையும் நீதிபதி ஏற்கவில்லை. சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்குமாறு நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சிதம்பரத்தை டெல்லி போலீசாரின் வேனில் அமர வைத்து திகார் சிறைக்கு கொண்டு சென்றனர். முன்னதாக, சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன் என்றார். போலீஸ் வேனில் கம்பிவலை ஜன்னலுக்கு அருகில் அமர்ந்த சிதம்பரம், மீடியா கேமராமேன்களை பார்த்து கையசைத்து விட்டு சென்றார்.
திகார் சிறையில் அவருக்கு 7ம் நம்பர் செல்(தனி அறை) ஒதுக்கப்பட்டது. இரவு உணவாக அவருக்கு ரொட்டி, பருப்பு குழம்பு, சப்ஜி ஆகியவை வழங்கப்படும் என்று சிறை கண்காணிப்பாளர் சந்தீப் கோயல் தெரிவித்தார். மேலும், வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளிட்ட இதர வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.