காவிரியில் 70,000 கனஅடி நீர்திறப்பு... மேட்டூர் அணை நிரம்புகிறது!

by எஸ். எம். கணபதி, Sep 6, 2019, 11:16 AM IST
Share Tweet Whatsapp

கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், காவிரியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து, அணை நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல் வாரத்தில் கர்நாடகாவில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நான்கே நாட்களில் நிரம்பி வழிந்தன. அணைகளில் இருந்து உபரி நீராக, 3 லட்சம் கனஅடி வரை காவிரியில் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் நீர்மட்டம், ஐந்தே நாட்களில் 100 அடியைக் கடந்தது. ஆகஸ்ட் 13-ந் தேதி 108 அடியை எட்டிய நிலையில், டெல்டா பாசனத்துக்காக அணையும் திறக்கப்பட்டது.

இதன் பின்னர், கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக சரிந்தது. இருந்தாலும் மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறக்கும் நீரின் அளவை விட வரத்து கூடுதலாகவே இருந்ததால் கடந்த ஆக.23-ந் தேதி அணை நீர்மட்டம் 117 அடி வரை எட்டியது. அதன் பின்னர் நீர்வரத்து குறைய, அணை நீர்மட்டமும் மெதுவாக சரியத் தொடங்கி, நேற்று முன்தினம் 115.63 அடியானது.

இந்நிலையில் கர்நாடகாவிலும், கேரளாவிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக, கன மழை மீண்டும் வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் மீண்டும் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரியில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 50 ஆயிரம் கன அடியும், கபினியிலிருந்து 20 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 70 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு, தமிழகம் நோக்கி சீறிப் பாய்ந்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் நேற்று 18 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பாசனத்திற்காக 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், அணை நீர்மட்டமும் 116.72 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நீர் மட்டம் , முழுக் கொள்ளளவை (120 அடி) ஒரு சில நாட்களில் எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Leave a reply