மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதிலளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்(உபா) சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பழைய சட்டத்தின் கீழ் ஒரு இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்தியாவில் அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்கலாம். மேலும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம். புதிய சட்டத்தின்படி, ஒரு இயக்கத்தை மட்டுமின்றி, தனி ஒருவரைக் கூட பயங்கரவாதியாக அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால், அவர் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.
புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகிர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை(உபா) எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாஜல் அவஸ்தி என்ற தொண்டு நிறுவனமும், சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கமும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
இம்மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. புதிய சட்டத்தின் கீழ் யாரையும் பயங்கரவாதியாக அறிவித்து, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து பாதிப்படையச் செய்ய முடியும். பயங்கரவாதத்தை தடுக்கும் போர்வையில், அரசுக்கு எதிரானவர்கள் மீது மறைமுகமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டம்தான் உபா சட்டம். எனவே, ஜனநாயகத்திற்கு பாதிப்பு வராமல் தடுக்க இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்குமாறு கூறி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.