ஆந்திராவில் 74 வயது பாட்டிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால், 55 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த அந்த முதிய தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நேலபார்த்திபகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எர்ரம்செட்டி ராஜாராவ். இவரது மனைவி மங்கயம்மா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 55 ஆண்டுகளாகி விட்டன. ஆனால், குழந்தையே இல்லை. இதனால், குழந்தை ஆசையில் ஏங்கித் தவித்தனர். அப்போது குண்டூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் வயதான பெண்களும் செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொண்டதை அறிந்தனர். இதையடுத்து, குண்டூரில் உள்ள அகல்யா மருத்துவமனைக்கு வந்தனர்.
74 வயதான மங்கயம்மாவின் உடல்நிலை குழந்தை பெற்றுக் கொள்ள சரிப்பட்டு வருமா என்று மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு, செயற்கைக் கரு தரிக்கும் முறையில்(விட்ரோ பெர்ட்டிலைசேசன்) கருத்தரிக்கச் செய்யப்பட்டது. இதன்பின், மருத்துவமனையிலேயே அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று(செப்.5) காலையில் மங்கயம்மாவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் உமாசங்கர் தலைமையில் 4 டாக்டர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதில், மங்கயம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டுமே பெண் குழந்தைகள். இது பற்றி, டாக்டர் உமாசங்கர் கூறுகையில், தாயும் குழந்தைகளும் சுகமாக உள்ளனர். இது நிச்சயமாக மருத்துவ உலகில் ஒரு சாதனை என்றார்.
ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டில் பஞ்சாப்பை சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்ற 70 வயது பெண்மணி, ஆண்குழந்தை பெற்றார். 70வயதில் குழந்தை பெற்றதுதான் சாதனையாக இருந்தது. இப்போது அதை 74 வயது மங்கயம்மா முறியடித்துள்ளார்.