தலைமை நீதிபதி மாற்றத்துக்கு எதிர்ப்பு.. வக்கீல்கள் நாளை போராட்டம்

Sep 8, 2019, 09:24 AM IST

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் வக்கீல்கள் நாளை(செப்.9) போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தியாவில் உள்ள ஐகோர்ட் தலைமை நீதிபதிகளில் மூத்த நீதிபதி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி. இவரை மேகாலயா ஐகோர்ட்டுக்கும், அங்குள்ள தலைமை நீதிபதி மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கும் பணியிட மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை ஐகோர்ட் ஆங்கிலேயர் ஆட்சியில் துவக்கப்பட்ட சார்ட்டர்டு ஐகோர்ட்டுகளில் ஒன்று.

இந்த ஐகோர்ட்டில் இருந்து மிகச் சிறிய ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றுவதை தஹில் ரமானி, அவமானமாக கருதினார். தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், இப்படி மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாறுதல் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் நிராகரித்தது. இதையடுத்து, தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவரது ராஜினாமாவை சுப்ரீம் கோர்ட் இன்னும் ஏற்கவில்லை.

இதற்கிடையே, தலைமை நீதிபதியை மாற்றியதற்கு தமிழக வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ஐகோர்ட் முன்பாக நாளை(செப்.9) காலை, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் தலைமையில் வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். மேலும், சென்னை ஐகோர்ட் வக்கீ்ல்கள் சங்கம், மதுரை ஐகோர்ட் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை நாளை அவசரப் பொதுக் குழுவை கூட்டியுள்ளன. இதில் தலைமை நீதிபதியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதுடன், மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இதற்கிடையே, தலைமை நீதிபதியின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், ஐகோர்ட் முதல் பெஞ்சில் தலைமை நீதிபதி தஹில் ரமானியும், நீதிபதி எம்.துரைசாமியும் நாளை வழக்கம் போல் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனாலும், ராஜினாமா கடிதம் அனுப்பிய பின்பு தலைமை நீதிபதி தஹில்ரமானி, வழக்குகளை விசாரிப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில், தமது ராஜினாமா முடிவை முதன்முதலில் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி தஹில் ரமானி, தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.


Speed News

 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

  11,300 வென்டிலேட்டர்கள் சப்ளை

  கொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன. 

  இந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார். 

  Jul 4, 2020, 14:34 PM IST
 • சாத்தான்குளம் வழக்கில் 

  மேலும் 4 பேர் கைது

  சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.

  இந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  Jul 4, 2020, 14:30 PM IST
 • அமைச்சர் மனைவிக்கு கொரோனா..

  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

  ஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  Jul 4, 2020, 14:26 PM IST
 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST
 • டெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு

  கொரோனா பாதிப்பு

  டெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.

  Jul 1, 2020, 13:45 PM IST