காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க இந்தியாவும் சர்வதேச அரங்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கூட்டம், ஜெனீவாவில் நாளை(செப்.9) முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மெகமூத் குரேஷி தலைமையிலான குழு, ஐ.நா. கவுன்சிலில் அந்நாட்டுக்கு உள்ள ஆதரவை அறிந்து அதற்கேற்ப காஷ்மீர் பிரச்னையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, அவசர விவாதம் நடத்த தீர்மானம் கொண்டு வரும். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். இதில் தோற்று விட்டால் விவாதம் நடத்தப்படாது.
ஏற்கனவே ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி நடைபெற்ற போது, முதல் சுற்றில் சீனாவும், இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலையை எடுத்தன. அதன்பிறகு, இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளால், காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றும் பாகிஸ்தானின் கனவு தவிடுபொடியானது. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் கொண்டு வரும் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன்படி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அது குறித்து ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று விளக்கினார். சீனா, இந்தோனேஷியா, மாலத்தீவு, பெல்ஜியம், போலந்து, ரஷ்யா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு அவர் நேரில் சென்று அந்நாட்டு தலைவர்களிடம் விளக்கினார். மேலும், தென்னாப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடனும் ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உள்ள 47 நாடுகளின் தலைவர்களுடனும் ஜெய்சங்கர், இந்தியாவின் நிலை குறித்து விளக்கி வருகிறார். இதனால், காஷ்மீரில் மனித உரிமை மீறல் என்று ஐ.நா.கவுன்சிலில் விவாதம் நடத்தும் பாகிஸ்தானின் முயற்சிகள் வீழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும், இதில் வேறு நாடுகள் தலையிட முடியாது என்றும் இந்தியா உறுதியாக கூறி வருகிறது.
மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் ஜம்முகாஷ்மீர் இத்தனை ஆண்டுகளாக பாதிப்படைந்தது குறித்தும் இந்தியா சர்வதேச நாடுகளுக்கு விளக்கி வருகிறது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் தாக்குர்சிங், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாரியா ஆகியோர் அடங்கிய குழு, ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளது.