ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரு சரக்கு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் அதிகமான அபராதமாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வகையில் வாகனப் போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
கடந்த வாரம், டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் தினஷே் மதன் என்பவர் மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவரை போலீசார் நிறுத்தினர். அவரிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. இதையடுத்து, அவருக்கு டெல்லி போலீசார் ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தின் தூத்துக்குடியில் சண்முகநாதன்(29) என்பவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. போதையில் இருந்த அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. ஹெல்மெட்டும் அணியவில்லை. இதையடுத்து, அவரிடம் போதையில் வண்டி ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், லைசென்ஸ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், ஹெல்மெட் போடாததற்காக ரூ.1000 என்று ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இப்போது இதையெல்லாம் விட மிக அதிகமாக ஒடிசாவில் ஒரு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது சமூக ஊடகங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. ஒடிசாவின் சம்பல்பூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி லலித் மோகன் பெகுரா, வாகனங்களை சோதனை செய்தார். அப்போது, நாகலாந்தின் பி.எல்.ஏ. உள்கட்டமைப்பு கம்பெனியில் இருந்து ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு சட்டீஸ்கர் நோக்கி சென்ற சரக்கு லாரியை சோதனையிட்டார்.
அந்த சரக்கு லாரியை ஓட்டிய அசோக் ஜாதவ், டிரைவர் அல்ல, அவர் கிளீனர் என்பது தெரிய வந்தது. அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. இதையடுத்து, கிளீனர் வண்டி ஓட்டியதற்கு ரூ.5000, லைசென்ஸ் இல்லாததற்கு ரூ.5000, அதிக எடை(18 டன்னுக்கு அதிகமாக) ஏற்றி வந்ததற்காக ரூ.56000, இதே போல் மேலும் சில விதிமீறல்களுக்குமாக சேர்த்து மொத்தம் ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத்தைக் குறைக்குமாறு பி.எல்.ஏ. கம்பெனியினர் போக்குவரத்து அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியில் ரூ.70 ஆயிரமாக அபராதம் குறைக்கப்பட்டது. அதை அவர்கள் செலுத்தினர். இந்த காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.