லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

by எஸ். எம். கணபதி, Sep 9, 2019, 09:12 AM IST
Share Tweet Whatsapp

சந்திரன் மேற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. கடந்த ஜூலை 22ம் தேதி சந்திரயான்2, விண்ணில் ஏவப்பட்டது முதல் பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டறையில் விஞ்ஞானிகள் தினமும் 16 மணி நேரம் வேலை பார்த்தனர். சந்திரயான் சுற்றுப்பாதை, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட் 2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்பட்டது.

இதன்பின்னர், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட லேண்டர் விக்ரம் பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் லேண்டர் விக்ரமை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றி வந்தனர். ஆனால், லேண்டர் சந்திரனுக்கு மேற்பரப்பில் 2.1 கி.மீ. தூரத்தில் இருந்த போது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு திடீரென துண்டாகி விட்டது. இதனால், பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்த விஞ்ஞானிகள் பதற்றமடைந்தனர். விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ தலைவர் சிவன் தீவிர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து லேண்டரை கண்டுபிடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து, லேண்டரை பிரித்து விட்டவுடன் சந்திரனுக்கு 100 கி.மீ. தூரத்தில் வட்டப்பாதையில் அதை சுற்றி வந்த ஆர்பிட்டரில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. அப்போது ஆர்பிட்டர், சந்திரனின் மேற்பரப்பில் லேண்டர் விக்ரமை கண்டுபிடித்து படம் அனுப்பியது. சந்திரனின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்குவதற்கு திட்டமிட்டிருந்த பகுதிக்கு அருகே லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. லேண்டர் விக்ரம், சந்திரனுடைய மேற்பரப்பில் 14 நாட்கள் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே, அதன் ஆயுட்காலமான 14 நாட்களுக்குள் அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமென்று விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே, லேண்டரை சரியான திசையில் இறக்கியது வரை சந்திரயான் 2 திட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. மேலும், ஆர்பிட்டரில் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் இந்த திட்டத்தில் 90 முதல் 95 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


Leave a reply