பிரதமர் நரேந்திர மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாளை மாலை சந்திக்கிறார். இது தேசிய அரசியலில் பல்வேறு யூகங்களை இப்போதே கிளப்பி வருகிறது.
மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் மிகக் கடுமையாக விமர்சித்தவர். காங்கிரஸ் தலைமையை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்காத நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பவராக மம்தா திகழ்ந்தார். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் திடீரென பாஜகவே 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இதன்பின், பிரதமராக மோடி 2வது முறையாக பொறுப்பேற்கும் முன்பே மம்தா பானர்ஜிக்கு பாஜக குறிவைத்தது. அந்தக் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று கவுன்சிலர்கள் வரை பாஜகவுக்கு இழுக்கப்பட்டனர். மம்தா செல்லும் இடங்களில் வேண்டுமென்றே பாஜகவினர் கூடி நின்று, ஜெய்ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பி வெறுப்பேற்றினர். ஆனாலும், மம்தா பானர்ஜி கடுமையாக குரல் கொடுத்து வந்தார்.
இதற்கிடையே, சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரான ராஜீவ்குமாருக்கு சிபிஐ நெருக்கடி கொடுத்தது. இது வரை அவரை காப்பாற்றி வந்த மம்தா பானர்ஜியால் தொடர்ந்து அவரை சிபிஐ விசாரணையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. ராஜீவ்குமாரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன. தற்போது எந்நேரத்திலும் அவரை சிபிஐ கைது செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் மோடியை நாளை மாலை 4.30 மணிக்கு அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்திக்கவிருக்கிறார். இதற்காக இன்றே அவர் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு செல்கிறார். இந்த சந்திப்பிற்கு பிறகு, பாஜக பக்கமாக திரிணாமுல் சாயலாம் என்றும், காங்கிரஸை தனிமைப்படுத்தி முழுமையாக அழித்து விட பாஜக நினைக்கிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் கிளம்பியுள்ளது.
ஆனால், இது பற்றி திரிணாமுல் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், மம்தா பானர்ஜி நிர்வாக விஷயங்களுக்காகவே பிரதமரை சந்திக்கிறார். பிரதமர் 2வது முறை பொறுப்பேற்ற பிறகு அவரை சந்திக்க முதல்வர் மம்தா அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார். இப்போதுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், மாநில தேவைகள் குறித்தும், மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமரிடம் மம்தா பேசுவார். அரசியல் எதுவும் பேச மாட்டார் என்று தெரிவித்தார்.
அதே சமயம், மார்க்சிஸ்ட் உள்பட மற்ற கட்சியினர், இப்போது பிரதமரை மம்தா பானர்ஜி சந்திப்பதே ராஜீவ்குமாருக்கு உள்ள நெருக்கடியால்தான். அவர்தான் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் மம்தாவுக்கு நெருக்கமானவர்களுக்கு உடந்தையாக இருந்தார். எனவே, அவர் கைதானால் அது தன்னையும் பாதிக்கும் என்பதால், பிரதமரை அவர் சந்திக்கிறார் என்று பேசுகின்றனர்.
எனவே, நாளை பிரதமரை சந்தித்து விட்டு மம்தா அளிக்கும் பேட்டியில் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதா என்பது தெரிய வரும்.