இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணம் செய்தார்.
இந்துஸ்தான் ஏரோநோட்டிக்ஸ் லிமிடெட் என்ற மத்திய அரசின் ராணுவத் தளவாட நிறுவனம், தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே 16 தேஜஸ் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு்ள்ளது. இதன் புதிய வடிவமைப்பு தேஜஸ் விமானம் சோதனைகள் முடிந்து விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.
இந்த சூழலில், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமானத் தளத்தில் இருந்து தேஜஸ் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை பயணம் செய்தார். விமானப்படை உடை அணிந்து சுமார் அரை மணி நேரம் அந்த விமானத்தில் அவர் பயணம் செய்தார். விமானப்படையின் சீனியர் பைலட் அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார்.
இதன்பின்னர், ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்த இலகுரக போர் விமானம், வேகமாகச் சென்றாலும் இடையூறு இல்லாத பயணமாகவே இருக்கிறது. இது போன்ற போர் விமானங்களை தயாரித்த நமது எச்.ஏ.எல் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளை பாராட்டுகிறேன். வருங்காலத்தில் இந்தியா போர் விமானங்களை தயாரித்து விற்கும் நாடாக திகழும் என்றார்.
ஏற்கனவே மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பதவி வகித்த போது, அவர் சுகோய்-30 போர் விமானத்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.