பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே செல்வதால், முதலீடுகளை ஊக்குவிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார். இன்று காலையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும். புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த வரி விகிதம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும். ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு இது அமல்படுத்தப்படும். முன்கூட்டியே வரி செலுத்தியவர்களுக்கு அது சரி செய்யப்படும். இந்த வரிச் சலுகை அளிப்பதால், அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், எந்தவிதமான வரிச்சலுகைகளும் பெறாமல் இருந்தால், அவற்றிற்கான வருமான வரி 22 சதவீதமாக குறைக்கப்படும். அத்துடன் உபவரிகள் சேர்த்து 25.17 சதவீதமாக வரிவிகிதம் இருக்கும். இந்நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்த தேவையில்லை.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு வருமான வரி 15 சதவீதமாக குறைக்கப்படும்.
இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் சலுகைகள் அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1900 புள்ளிகள் உயர்ந்தது.