தலைமை நீதிபதி மாற்றத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்..

key reason for Justice Tahilramani transfer was her short working hours.

Sep 22, 2019, 09:25 AM IST

தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றத்திற்கு அவர் மீதான பல குற்றச்சாட்டுகளே காரணம் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி நியமிக்கப்பட்டார். மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவரையும் சேர்த்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக 2 பெண் நீதிபதிகள்தான் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம்(ஆக.) 28ம் தேதியன்று இவரை மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், அங்குள்ள தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்து, சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவே, கொலிஜியம் என்று அழைக்கப்படுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை நீதிபதி தஹில்ரமானியை மாற்றுவதாக கொலிஜியம் உத்தரவில் கூறப்பட்டது. இதையடுத்து, தனது பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்யுமாறு கொலிஜியத்திற்கு தலைமை நீதிபதி தஹில்ரமானி கோரிக்கைக் கடிதம் அனுப்பினார். ஆனால், அதை நிராகரித்த கொலிஜியம் தனது முந்தைய உத்தரவை உறுதி செய்தது.

சென்னை, மும்பை, கொல்கத்தா ஐகோர்ட்டுகள், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. சார்ட்டர்டு ஐகோர்ட் என்று சொல்லப்படும் இந்த நீதிமன்றங்களில் பணியாற்றுவதே பெருமையாக கருதப்படும். எனவே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து விட்டு, மேகாலயா போன்ற சிறிய ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதை விரும்பாமல் தஹில் ரமானி ராஜினாமா செய்தார். அவரது ராஜினமா ஏற்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் இருந்து உத்தரவு வருவதற்காக காத்திருந்தார்.

இதற்கிடையே, தலைமை நீதிபதி தஹில் ரமானி மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க கூடாது என்று கோரி வழக்கறிஞர் பிரபாகரன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்று, பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி வினீத் கோத்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2005-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016ல் கர்நாடக ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து மாற்றப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் 2 வது மூத்த நீதிபதியாக பதவி ஏற்றார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்.

இந்நிலையில், நீதிபதி தஹில் ரமானியின் பணிமாற்றத்திற்கு அவர் மீதான திடுக்கிடும் புகார்களே காரணம் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:

சென்னை ஐகோர்ட்டில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், நிர்வாகக் காரணங்களுக்காக தலைமை நீதிபதி தஹில் ரமானியை மாற்றுவதாக கொலிஜியம் அந்த உத்தரவில் கூறியிருந்தது. அப்படி முடிவெடுப்பதற்கான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி தஹில் ரமானி, பல நாட்கள் மதியத்திற்கு மேல் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பதே இல்லை. சென்னை ஐகோர்ட் போன்ற பெரிய ஐகோர்ட்களில் தலைமை நீதிபதிகள் மாலை வரை வழக்குகளை விசாரிப்பார்கள். ஆனால், இவர் இப்படி செய்வதால் மற்ற நீதிபதிகளுக்கு தவறான முன்னுதாரணமாகி விட்டார்.

இரண்டாவதாக, முந்தைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் நியமிக்கப்பட்ட ஒரு டிவிஷன் பெஞ்ச்சை திடீரென கலைத்து உத்தரவிட்டிருக்கிறார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த அந்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள், அந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை ரத்து செய்து, பொன்.மாணிக்கவேலை விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர். அந்த வழக்கின் இறுதிக் கட்டத்தில் திடீரென பெஞ்ச்சை கலைத்து விட்டார் தலைமை நீதிபதி தஹில் ரமானி. அதற்கு, தற்போது சிலை கடத்தல் வழக்குகள் குறைந்து விட்டது என்ற காரணத்தை மட்டும் கூறியிருந்தார்.

அதே சமயம், தலைமை நீதிபதி தஹில் ரமானி, தமிழகத்தை ஆளும் கட்சியில் ஒரு முக்கியப் பிரமுகருடன் நட்பு வைத்திருந்தார். அது மட்டுமின்றி, சென்னையில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியிருக்கிறார். இவை தொடர்பாக பல குற்றச்சாட்டுகள், சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவே அது பற்றி தமிழக நீதிபதிகள் மூவரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதன்பின்பே கொலிஜியம் முடிவெடுத்துள்ளது.

இந்த ரிப்போர்ட் குறித்து தலைமை நீதிபதி தஹில் ரமானியின் விளக்கம் பெற முயன்ற போது அவர் பதிலளிக்கவில்லை. அவரது செயலாளரும், பணி மாற்றம் முடிந்து போன விஷயம் என்று கூறிவிட்டார்.

இவ்வாறு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை ஐகோர்ட்டில் உள்ள 58 நீதிபதிகளில் 15 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். தலைமை நீதிபதி தஹில் ரமானி உள்பட மற்றவர்கள் வெளியிடவில்லை.

You'r reading தலைமை நீதிபதி மாற்றத்தின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை