காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டனில், ஹவ்டி மோடி என்ற தலைப்பில் நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொண்டார். பிரதமர் மோடி, இவ்விழாவில் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சம உரிமைகள் கிடைத்துள்ளன. இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு உள்ள அரசியல் சட்டம் இப்போது இந்த மாநிலத்திற்கும் பொருந்தும்.
பிரிவு 370 இருந்ததால் பெண்கள், குழந்தைகள், தலித்மக்கள் ஆகியோரிடம் காட்டப்பட்ட பாகுபாடு, அந்தப் பிரிவுக்கு விடை கொடுத்ததன் மூலம் முடிந்து விட்டது. இந்தப் பிரிவை ரத்து செய்ததால், சிலருக்கு பிரச்னையாக இருக்கிறது. அவர்கள் சொந்த நாட்டடை முறையாக ஆட்சி செய்ய முடியாதவர்கள். தீவிரவாதத்தை வளர்ப்பவர்கள். அதை மொத்த உலகமும் அறிந்திருக்கிறது. 26/11, 9/11 தாக்குதல்களுக்கு காரணமான சதிகாரர்கள் எங்கே இருக்கிறார்கள்?
பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்து விட்டது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் போராட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
முன்னதாக அவர் பேசும் போது, முடியாதவற்றையும் செய்யத் தயாராக இருக்கும் எங்கள் அரசின் முயற்சியால், பிரிவு 370ஐ ரத்து செய்ய முடிந்தது. இதை நிறைவேற்றிய அரசுக்கும், நாடாளுமன்றத்திற்கும் நீங்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மக்கள் எழுந்து நின்று மோடி, மோடி என்று கோஷமிட்டு கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஐம்பதாயிரம் அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்றனர். பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.