ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று தமிழில் பேசி அசத்தினார். மேலும் 8 இந்திய மொழிகளிலும் அவர் அதைப் பேசினார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு ஒரு வார பயணமாக சென்றுள்ளார். ஹுஸ்டன் நகரில் ஹவ்டி மோடி என்ற தலைப்பில் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவித்து மீண்டும் மோடி பேசினார். மோடி பேசுகையில், நலமா மோடி என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று நான் பதில் அளிக்கிறேன் என்றார். இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்பதை தமிழ் உள்பட 9 மொழிகளில் மோடி சொன்னார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய மோடி, இந்தியா, பல நூற்றாண்டுகளாக பல்வேறு மொழி கலாச்சாரங்களுடன் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. மொழி மட்டும் அல்ல, மதம், உணவுப் பழக்கம், பருவநிலை போன்றவற்றிலும் இந்தியாவில் பன்முகத்தன்மை நிலவுகிறது. பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பலம் என்றார்.
நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பேச வேண்டும் என்று சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்கு தமிழ்நாடு, கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, வட மாநிலங்கிலும் எதிர்ப்பு கிளம்பியது. பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒரே மொழிக்குள் கொண்டு வருவதா? என்று அரசியல் தலைவர்கள் கொதித்தனர். இதன்பின், அமித்ஷா தான் இந்தியை திணிக்கவில்லை என்று தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில், அமெரிக்காவில் போய் பிரதமர் மோடி, இந்தியாவின் பன்முகத்தன்மையை போற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.