இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்தவர். தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. உடனே, திரிணாமுல் கட்சியை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பாஜகவும், திரிணாமுல் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல்கள் நடைபெற்றன. கலவரங்கள் வெடித்தன. தற்போதுதான் அவை ஓய்ந்திருக்கிறது.
கடந்த வாரம் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் மத்திய பாஜக அமைச்சர் பாபுலால் சுப்ரியோ பங்கேற்றார். அந்த பல்கலைக்கழகத்தில் பாஜக மாணவர் சங்கத்தினருக்கும், மற்ற மாணவர் சங்கத்தினருக்கும் இடையே மோதல் இருந்தது. இதனால், சுப்ரியோவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவரை பல்கலைக்கழகத்தை வெளியேறவே முடியாமல் தடுத்தனர். அப்போது ஆளுநர் ஜெகதீப் தங்கார் தலையிட்டு போலீசார் மூலம் போராட்டத்தை நிறுத்தி, சுப்ரியோவை வெளியே அழைத்து சென்றார். அப்போது மாணவர்கள் தாக்கப்பட்டதாக, சுப்ரியோ மீது போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இந்த சூழலில், இன்று(செப்.24) கொல்கத்தாவில் தொழிற்சங்க விழா ஒன்றில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஜனநாயகத்தில் போராட்டங்கள் அவசியம் என்று நான் நம்புகிறேன். ஜனநாயக போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டால், அதன்பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது. மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால், சில இடங்களில் ஜனநாயகம் இல்லை. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்ததை நீங்கள் அறிவீர்கள். அவர்கள்(பாஜக) எல்லா இடத்திலும் புல்டோசரால் ஒடுக்குகிறார்கள். எல்லா இடங்களிலும் அதிகாரத்தை செலுத்துகிறார்கள் என்று கூறினார்.