கொல்கத்தாவில் ஏற்றுமதி கம்பெனியில் ரெய்டு நடந்த போது, 6வது மாடியில் இருந்து ரூ.2000 நோட்டுகள் வெளியே வீசப்பட்டன. அவை பறந்து வரவே மக்கள், இதென்னடா பணமழை பெய்கிறது என்று இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியார் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்கும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று மதியம் இங்கு திடீர் ரெய்டு நடத்தினர்.
கட்டிடத்தின் 6வது மாடியில் ரெய்டு நடந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள் சிலர் 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஜன்னல் வழியே வீசியெறிந்தனர். அந்த ரூபாய் நோட்டுகள் பறந்து வரவே, அவ்வழியே சென்ற மக்கள், பணமழை பெய்கிறதே என்று இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஒரு வினாடி தாமதிக்காது ஓடி, ஓடிச் சென்று பணத்தை பொறுக்கினர்.
மாடியில் இருந்து பணக்கட்டுகள் விழுவதையும், அதனை மக்களும், கீழ்தளத்தில் பணியில் இருந்த காவலாளிகளும் பொறுக்கி எடுக்கும் காட்சியை சிலர் செல்போனில்் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இது சில மணி நேரத்தில் நாடு முழுவதும் வைரலாகி விட்டது.
ரெய்டு குறித்து விசாரித்த போது, கூடுதல் இயக்குனர் தீபாங்கர் அரோன் தலைமையில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாகவும், அதில் பல கள்ளக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், ஊழியர்கள் வீசியெறிந்த பணம் சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.