தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. சென்னமானேனி ரமேஷின், இந்திய குடியுரிமையை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வெமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ.வான சென்னமானேனி ரமேஷ், டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர். இவர் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவின் அண்ணன் ராஜேஸ்வர் ராவின் மகன். ராஜேஸ்வர்ராவ் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றி பின்னாளில் தெலுங்குதேசம் கட்சிக்கு மாறியவர்.
சென்னமானேனி ரமேஷ் கடந்த 1990ம் ஆண்டில் ஜெர்மனியில் வேலைக்கு சென்று அங்கேயே குடியேறினார். 1993ல் அவர் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்து, அந்நாட்டு பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்.
இதன்பின், கடந்த 2008ம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பிய ரமேஷ், இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்றார். 2009ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். அவரிடம் தோற்ற ஆதி சீனிவாஸ் என்பவர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு புகார் அனுப்பினார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி இந்தியாவில் 12 மாதங்கள் நிரந்தரமாக தங்கியிருந்த பின்புதான் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியும். ஆனால், ரமேஷ் 2008ல் வந்த பிறகு ஜெர்மனி பாஸ்போர்ட்டை தொடர்ந்து வைத்திருந்தார். அதன்மூலம், அவர் ஜெர்மனிக்கு போய் விட்டு வந்திருக்கிறார். எனவே, குடியுரிமை விதிகளை அவர் மீறியிருக்கிறார். அவருக்கு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கமிட்டி அமைத்து விசாரித்தது. இந்நிலையில், இந்திய குடியுரிமைச் சட்டவிதிகளை இவர் முறையாக பின்பற்றவில்லை என்று கூறி, குடியுரிமையை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியுரிமைச் சட்டப் பிரிவு 10ன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.