மேற்குவங்க சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை கேட்ட கவர்னர்.. தண்ணி காட்டிய மம்தா..

Bengal Governor, Mamata Banerjee Swap Stinkers Over Citizenship Protests

by எஸ். எம். கணபதி, Dec 17, 2019, 08:19 AM IST

மேற்கு வங்கத்தில் கவர்னர் அழைப்பு விடுத்தும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் அவரை சந்திக்கச் செல்லவில்லை. மேலும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னருக்கும் இடையே கடிதங்கள் மூலம் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்திலும் ரயில் நிலையங்களுக்கு தீ வைப்பு உள்பட வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.

இதனால், கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார். மேலும், அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பல ட்விட்களை போட்டார்.

ஆனால், மம்தா பானர்ஜி பதிலுக்கு காரசாரமாக ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர், எனது அரசு நிர்வாகத்தில் முக்கிய நோக்கம், கவர்னருக்கு விளக்கம் கொடுப்பது அல்ல. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரித்து அமைதியை ஏற்படுத்துவதில்தான் அரசு நிர்வாகம் முழு கவனம் செலுத்தும். எனவே, இதற்கு கவர்னர் தயவு செய்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாறாக, போராட்டக்காரர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி வன்முறைகளை தூண்டி விடுவது போல் கவர்னர் செயல்படக் கூடாது என்று கடுமையான வாசகங்களை எழுதியிருந்தார்.

இதையடுத்து, கவர்னர் தங்கர் பதிலுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவி வகிக்கும் தனக்கு மாநில அரசின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளதாகவும், தனது கடமைகளை செய்ய மாநில அரசு ஒத்துழைக்க வேண்டுமென்று கடுமையாக பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அவரை ஒரு விழாவுக்கு அழைத்து தனி மேடையில் உட்கார வைத்து மம்தா அவமானப்படுத்தினார். தற்போது தலைமைச் செயலாளர், டிஜிபியை கூட கவர்னரை சந்திக்க அனுமதிக்காமல் உள்ளார்.

You'r reading மேற்குவங்க சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை கேட்ட கவர்னர்.. தண்ணி காட்டிய மம்தா.. Originally posted on The Subeditor Tamil

More Kolkata News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை