குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியுரிைம திருத்தச் சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதற்கிடையே, ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக பிரச்னை கிளம்பி, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளும், எம்.பி.க்களும் ஆதரவு அளித்துதான் நிறைவேற்றப்பட்டது. பல நூறாண்டுகளாக இந்த நாடு பின்பற்றி வரும் ஏற்புடைமை, நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் போன்ற கலாசாரத்தின் அடிப்படையில்தான் இந்த சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
நாட்டில் உள்ள எந்த மதத்தை சேர்ந்த எவருக்கும் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை எனது உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது எந்தவிதத்திலும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
நீண்ட காலமாக வெளிநாடுகளில் மத துன்புறுத்தலுக்கு பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கும், இந்தியாவை தவிர வேறு போக்கிடம் இல்லாதவர்களுக்காகவே இந்த சட்டம் வந்துள்ளது.
ஜனநாயகத்தில் விவாதங்களும், எதிர்ப்புகளும் இருக்கலாம். அதேசமயம், பொது சொத்துகளை சேதப்படுத்துவது, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு செய்வது ஆகியவற்றுக்கு இந்திய பண்பாட்டில் இடமில்லை. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சில சுயநல சக்திகள் நம்மை பிளவுபடுத்தி, இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக, குறிப்பாக ஏழை, எளியவர்களின் வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. அதனால், வதந்திகளுக்கும், தவறான தகவல்களுக்கும் ஆட்படாமல், வதந்திகளை பரப்புவோரிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.