பாஜக முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த சட்டமாணவியை பணம் கேட்டு மிரட்டியதாக கூறி, உ.பி. போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுக்தேவானந்த் சட்டக் கல்லூரி உள்ளது. வாஜ்யபாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுவாமி சின்மயானந்த், இந்த கல்லூரி சேர்மனாக உள்ளார். இந்த கல்லூரியில் எல்.எல்.எம். படித்த ஒரு பெண், கடந்த மாதம் 28ம் தேதியன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் அவர் முகத்தை மறைத்தபடி அழுது கொண்டே பேசியிருந்தார்.
தான் சுக்தேவானந்த் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்த போது, தனக்கு சின்மயானந்த் பகுதி நேர வேலை கொடுத்ததாக கூறியிருந்தார். கல்லூரியில் வேலை முடிய இரவு நேரமாகி விடும் என்பதால், கல்லூரி விடுதியில் தங்கியதாகவும், அப்போது தன்னை மிரட்டி சின்மயானந்த் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஓடி ஒளிந்து கொண்டு வருவதாக கூறி, சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன்பின், உ.பி. மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், எப்.ஐ.ஆரில் சின்மயானந்த் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு பிறகு அந்த மாணவியை ராஜஸ்தானில் கண்டுபிடித்த உ.பி. போலீசார், அவரை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, உ.பி.யில் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த மாணவி சொன்ன பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்மயானந்த்தை கைது செய்தனர்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திடீரென பாலியல் புகார் கொடுத்த பெண்ணையே கைது செய்துள்ளனர். முன்னதாக, அவரது உறவினர்கள் சஞ்சய், சந்தீப், விக்ரம் ஆகிய மூவரை கைது செய்திருக்கின்றனர். இது குறித்து, உ.பி. டிஜிபி சிங் கூறுகையில், சின்மயானந்த்திடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக அந்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஏற்கனவே கைதான அவரது உறவினர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தன்னை கைது செய்யாமல் இருக்க மாணவியின் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் நிராகரித்ததால், தற்போது ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.