இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார்.
ஹருன் ரிச் அமைப்பு சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2018ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ரிலையன்ஸ் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 80,700 கோடி ரூபாயாகும்.
இந்த பட்டியலில் 2ம் இடத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்துஜா குரூப் சேர்மன் எஸ்.பி.இந்துஜா பிடித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86,500 கோடியாகும். மூன்றாவது இடத்தை விப்ரோ நிறுவன அதிபர் ஆசிம் பிரேம்ஜி பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 17,100 கோடியாகும்.
இந்தியர்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து வைத்திருப்பவர்கள் என்ற பட்டியலில் 953 பேர் உள்ளனர்.
இந்தியர்களில் முதல் 25 பணக்காரர்களின் சொத்துக்களை மட்டும் கூட்டினால், அது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில்(ஜி.டி.பி.) 10 சதவீதமாக இருக்கும். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கும் 953 பேரின் சொத்துக்களை கூட்டினால், அது ஜி.டி.பி.யில் 27 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
வேட்புமனுவில் வெறும் சில லட்சங்களை மட்டும் கணக்கு காட்டி விட்டு, பினாமி பெயர்களில் இந்திய அரசியல்வாதிகள் வைத்துள்ள சொத்துக்களை எல்லாம் கூட்டினால், அது ஜி.டி.பி.யில் 50 சதவீதத்தைக் கூட தாண்டி விடலாம். கருப்பு பணத்தை ஒழித்து விட்டதாக சொன்னாலும், அரசியல்வாதிகளின் கருப்பு பணம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது என்பது அவர்களை அருகில் இருந்து பார்க்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.