வெளிமாநில சிறையில் காஷ்மீர் இளைஞர்கள்.. ஐகோர்ட்டில் 235 ஆட்கொணர்வு மனு..

jammu kashmir youths locked in jails outside state

by எஸ். எம். கணபதி, Sep 26, 2019, 11:16 AM IST

காஷ்மீர் இளைஞர்கள் 150 பேர் வரை வெளிமாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அம்மாநில ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களில் 235 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை கடந்த ஆக.5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பும் என்று எதிர்பார்த்து, முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, அம்மாநில பத்திரிகையாளர்கள் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் சில நாட்களில் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், ஸ்ரீநகர் உள்பட சில நகரங்களில் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டன. எனினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் காஷ்மீருக்கு செல்ல இதுவரை அனுமதிக்கப்படவில்லை. மேலும், மெகபூபா, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக ஏராளமான இளைஞர்களை போலீசார் பிடித்து சென்று காவலில் வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சோபியான் மாவட்டத்தில் மக்களிடம் ஊடகங்கள் எடுத்த பேட்டிகளில் பலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களை காணாமல் போய் விட்டதாக கூறியுள்ளனர். அதே போல், சோபியான் மாவட்ட காவல் துறை தலைமை அலுவலகத்தில், மக்கள் தங்கள் குடும்பத்தினரை மீ்ட்டு தரக் கோரி புகார் கொடுக்க வரிசையில் காத்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மாநில டிஜிபி தில்பக் சிங் நேற்று கூறுகையில், கடந்த ஆக.5ம் தேதி முதல் வன்முறைகளில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மீது 3 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 800 பேரை காவலில் வைத்திருக்கிறோம். வௌிமாநில சிறைகளில் 150 பேர் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுக்கள்(ஹேபியஸ் கார்பஸ்) குவிந்து வருகின்றன. கடந்த ஜூன், ஜூலை மாதம் வரை இந்த ஐகோர்ட்டில் ஒரு மாதத்திற்கு 15 ஆட்கொணர்வு மனுக்கள்தான் தாக்கலாகியுள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 120 ஆட்கொணர்வு மனுக்களும், செப்டம்பரில் இது வரை 115 மனுக்களும் தாக்கலாகி உள்ளதாக அந்த ஐகோர்ட் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

You'r reading வெளிமாநில சிறையில் காஷ்மீர் இளைஞர்கள்.. ஐகோர்ட்டில் 235 ஆட்கொணர்வு மனு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை