பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து ஷமிகா ரவி, ரத்தின் ராய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்தவர்கள்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களாக பலர் நியமிக்கப்படுவார்கள். அவர்களில் ஓரிருவர் பகுதி நேர ஆலோசகர்களாகவும், சிலர் முழு நேர ஆலோசகர்களாகவும் பணியாற்றுவார்கள். இது வரை பகுதி நேர ஆலோசகர்களாக பணியாற்றி வந்த ஷமிகா ரவி, ரத்தின்ராய் ஆகியோர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக மாற்றியமைக்க்பபட்ட பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் இந்திராகாந்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிமா கோயல், ஜே.பி.மார்கன் நிறுவனத்தைச் சேர்ந்த சாஜித் செனாய் ஆகியோர் பகுதி நேர ஆலோசகர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நிதிஆயோக்கைச் சேர்ந்த பிபேக் டெப்ராய், ரத்தன் வாட்டல் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செப்.26 முதல் 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட ரத்தின் ராய், ஷமிகா ரவி ஆகியோர் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை துணிவுடன் விமர்சித்திரந்தனர். மத்திய அரசின் வெளிநாட்டுக் கடன் பத்திரங்கள் வெளியீட்டை ரத்தின் ராய் விமர்சித்தார். அதே போல், மத்திய அரசில் மறைமுகமான நிதிச் சிக்கல் இருக்கிறது என்று வெளிப்படையாகக் கூறினார்.
அதே போல், ஷமிகா ரவியும், மத்திய அரசில் பொருளாதாச் சிக்கல் உள்ளது என்று குறிப்பிட்டு, பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் வெறும் டிங்கரிங் வேலைகள் செய்தால் போதாது என்றும் வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், பொருளாதார நிலவரம் என்பது ஏதோ நிதித்துறைக்கு மட்டுமே பொறுப்பானது என்று நினைப்பது, ஒரு கம்பெனியின் வளர்ச்சிக்கு அக்கவுன்ட்ஸ் பிரிவை மட்டும் சுட்டிக் காட்டுவதற்கு சமம் என்றும் விமர்சித்தார்.
இதையடுத்து, பிரதமரின் ஆலோசகரே பொருளாதாரச் சிக்கல் உள்ளதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி, இனிமேலாவது சரியான நடவடிக்கைகளை எடுங்கள்.. என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் ட்விட்டரில் கொளுத்திப் போட்டார்.
இந்தச் சூழ்நிலையில்தான், ஷமிகாரவியும், ரத்தின்ராயும் பிரதமரின் ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.