ஆந்திராவில் டிவி5, ஏபிஎன் ஆகிய 2 டி.வி. சேனல்கள், கேபிள் டிவியில் இருட்டடிப்பு செய்யும் விவகாரம் இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே, ஜெகன் அரசை கண்டித்து எடிட்டர்ஸ் கில்டு வெளியிட்ட அறிக்கையில் தவறுதலாக தெலங்கானா என்று குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது.
ஆந்திராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஜெகன்மோகன் தலைமையில் ஆட்சி அமைத்தது.
இதன்பிறகு, ஏற்கனவே பதவியில் இருந்த தெலுங்குதேசம் கட்சியை விடாமல் துரத்தி, துரத்தி அடித்து வருகிறது ஜெகன் அரசு. தற்போது கூட, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் குடியிருப்பு வளாகம், விதிகளை மீறி கட்டப்பட்டது என்று அதை இடிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஜெகன் அரசை விமர்சித்த டிவி 5, ஏபிஎன் ஆகிய 2 நியூஸ் சேனல்களும் திடீரென கேபிள் டிவி ஒளிபரப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதை எதிர்த்து டிவி5 நிறுவனம், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை டிரிபியூனலில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின் போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிவி 5 ஒளிபரப்பு தடைபட்டதாக ஆந்திர அரசு கேபிள் டிவி நிறுவனம் கூறியது. அதை ஏற்காத டிரிபியூனல் உடனடியாக அந்த சேனல் ஒளிபரப்பை துவங்க உத்தரவிட்டது.
டிராய் உத்தரவுப்படி ஒரு சேனல் ஒளிபரப்பை 21 நாளைக்கு முன்பே நோட்டீஸ் ெகாடுத்துதான் நிறுத்த முடியும். தற்போது ஏபிஎன் சேனலும் வழக்கு தொடரப் போவதாக கூறியிருக்கிறது.
இந்த சூழலில், எடிட்டர்ஸ் கில்டு(மீடியா ஆசிரியர்கள் சங்கம்) அமைப்பின் தலைவர் சேகர்குப்தா, செயலாளர் ஏ.கே.பட்டாச்சார்யா, பொருளாளர் ஷீலா பட் ஆகியோர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், 2 சேனல்களின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதற்கு ஜெகன் அரசு காரணமா என்பதை விளக்க வேண்டும்.
இப்படி தடுப்பது பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையை தகர்ப்பதாகும் என்று கண்டித்திருந்தனர். ஆனால், ஜெகன் அரசை ஆந்திர அரசு என்று குறிப்பிடாமல் தெலங்கானா மாநில அரசு என்று தவறாக குறிப்பிட்டு விட்டனர். அவ்வளவுதான்... இந்த அறிக்கை தற்போது கேலியும், கிண்டலுமாக சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டது.
தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் ஆட்சி நடைபெறுகிறது. எடிட்டர்ஸ் கில்டு, தப்பான அறிக்கையை திருத்தி மீண்டும் புதிய அறிக்கை வெளியிட்டு விட்டது. ஆனாலும் ஆன்லைன் வாயை மூட முடியுமா?