அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல், குர் ஆனையும், பைபிளையும் சேர்க்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரியுள்ளது.
அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் “பகவத்கீதை” பாடமாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கல்வியாளர்களுக்கும், மதச்சார்பற்ற தன்மையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் ஆன்மீகக் கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அனைத்து மதங்களின் நீதி நூல்களும் அந்த பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், குறிப்பிட்ட ஒரு மதத்தின் நூலாக அடையாளப்படுத்தப்படுகிற பகவத்கீதையைப் பாடமாகச் சேர்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது.
அண்மையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது இது இந்த நாட்டில் இந்துத்துவா கொள்கையை மாணவர்களுக்குத் திணிக்கின்ற ஒரு கல்விக்கொள்கை என்கிற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகள் அந்த குற்றச்சாட்டை உண்மைப்படுத்துவது போல் அமைகின்றன. எனவே, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பகவத்கீதையைப் பாடமாக்கும் முடிவை உடனடியாக கைவிடவேண்டும். இல்லை எனில், “குர் ஆனையும், பைபிளையும்” அந்த பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார்.